பாவ புண்ணியக் கணக்குகள் உள்ளனவா என்று கேட்டால், உள்ளன. சுவர்க்கம் நரகம் உள்ளனவா என்று கேட்டால், உள்ளன. செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய முடியுமா என்று கேட்டால். செய்த பாவங்களுக்கு ஒரே ஒரு பரிகாரம் தான் செய்ய முடியும், மனம் திருந்தி, மனதார வருந்தி, யாருக்கு பாவம், துரோகம், செய்தோமோ அவர்களிடமும், இறைவனிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஒரு நம்பிக்கையை ஏற்றுக்கொண்டால் அல்லது ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டால் பாவங்கள் மன்னிக்கப்படும், எளிதாக சொர்க்கம் செல்லலாம் என்பதெல்லாம் அரசியல் கூட்டத்திற்கு ஆள் சேர்க்க கொடுக்கப்படும் சாராயமும் பிரியாணி பொட்டலமும் போன்றதுதான். மதத்துக்கு ஆள் சேர்க்க தூண்டப்படும் ஆசைகள்.
யார் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றுங்கள் அது உங்கள் உரிமை, ஆனால் ஒன்றை மட்டும் தெளிவாக மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். உங்கள் மதமே சம்மதித்தாலும் இயற்கைக்கு மாறாக எதையும் செய்யாதீர்கள், மற்றும் பிற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் எதையும் செய்யாதீர்கள்.
ஒரு மனிதர் 10 நன்மைகளும் 5 தீமைகளும் செய்திருக்கிறார் என்றால், அவர் 10 நன்மைக்கான பலனை அனுபவித்து 5 தீமைக்கான பலனையும் அனுபவிப்பாரே ஒழிய 10 நன்மைகளில் இருந்து 5 பாவங்களைக் கழித்துக்கொண்டு, மீதம் இருக்கும் 5 நன்மைக்கான பலன்களை மட்டும் அனுபவிப்பது இல்லை.
மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், அதற்குரிய பலன் நிச்சயமாக கிடைக்கும். அது யாராக இருந்தாலும் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் சரியே. இறைவன் பாரபட்சம் பார்ப்பதில்லை. சில மதங்களில் பாவ மன்னிப்பு வழங்குவதன் நோக்கமும், சில மதங்களைப் பின்பற்றினால் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கூறுவதன் நோக்கமும், மனிதர்கள் தன்னை மாற்றிக்கொண்டு திருந்தி வாழ ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுதான்.
மனிதர்கள் தவறுகள் செய்யும் இயல்புடையவர்கள்; இதுவரையில் செய்த பாவங்கள் போதும் இனிமேலாவது திருந்தி வாழ ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற நோக்கத்தில் தான் பாவமன்னிப்பு என்ற கோட்பாடு உருவாக்கப்பட்டது. உண்மையில் யாரும் எந்த பாவத்தில் இருந்தும் தப்பிக்க முடியாது, செய்த பாவத்திற்கான தண்டனை நிச்சயமாக கிடைக்கும். வாழ்க்கையில் துன்பங்கள் உருவாகாமல் இருக்க வேண்டுமா? பாவம் செய்யாமல் இருங்கள்.
பாவத்துக்கும் சாபத்துக்கும் விமோசனம் தருகிறேன், பரிகாரம் செய்யலாம் என்பதெல்லாம் சுத்த அபத்தமே. பாவங்களுக்கு ஒரே பரிகாரம் திருந்தி வாழ்தல் மட்டுமே. திருந்தி வாழ்ந்து புதிய பாவங்கள் செய்யாமல் இருந்தால் தண்டனை குறையலாம் மற்றபடி தண்டனையைத் தவிர்க்க முடியாது.