இறைவனுக்கு பிடித்த மதம் எது? இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கு மேல் ஒரு ஆற்றல் உள்ளது என்றும் அந்த ஆற்றல் ஏதோ ஒரு வகையில் தனக்கு உதவுகிறது அல்லது தன்னை கட்டுப்படுத்துகிறது என்றும் நம்பிக்கை இருக்கும். இறைவன், தெய்வம், கடவுள், சாமி, ஆண்டவன், என்று அந்த சக்திக்கு ஏதாவது ஒரு பெயர் சூட்டி அழைப்பார்கள். கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறும் நபர்கள் கூட பிரபஞ்ச ஆற்றல், பிரபஞ்ச சக்தி, படைப்பாற்றல், இயக்க சக்தி, என்று ஏதேனும் ஒரு ஆற்றலின் மீதும் இயக்கத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருப்பார்கள்.
மனித சக்தியை மீறிய ஒரு இயக்கம் இந்த உலகில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று, அனைவரும் உணர்ந்து கொள்ளும், புரிந்து கொள்ளும், அந்தப் பேராற்றலை தான் இறைவன் என்றும் தெய்வம் என்றும் அழைக்கிறோம். கடலில் வாழும் மீன்களுக்கு நாம் தண்ணீரில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது தெரியுமா? தண்ணீர் என்று ஒன்று தம்மைச் சுற்றி இருக்கிறது என்பதாவது புரியுமா? நாம் தினமும் சுவாசிக்கிறோம், காற்று இருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நம்மால் காற்றைக் காணவோ அல்லது காற்று இந்த உருவத்தில் தான் இருக்கும் இந்த தன்மையில் தான் இருக்கும் என்று குறிப்பிடவோ முடிகிறதா? அவ்வாறுதான் இறைவனும்.
இறைவன் மனித சிந்தனைக்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்டவன். அவன் அப்படித்தான் இருப்பான், இப்படித்தான் இருப்பான், இந்த தன்மையில் இருப்பான், என்று இன்றுவரையிலும் இந்த உலகில் தோன்றிய யாராலும் விளக்க முடியவில்லை. இனிமேல் பிறக்கும் மனிதர்களாலும் விளக்க முடியாது. அனைவருடைய சிந்தனைக்கும் கற்பனைக்கும் எட்டாத உயரத்தில் இருக்கும் இறைவனை மனிதர்கள் புரிந்து கொள்ள முயலும் பொழுது அவனது ஆற்றலின் தன்மைகளைப் புரிந்து கொள்கிறார்கள்.
அவர்கள் புரிந்து கொண்ட விதத்திற்கும், புரிதலுக்கும், கற்பனைக்கும், ஏற்றவாறு இறைவன், தெய்வம், கடவுள், ஆண்டவர், என்று ஏதாவது ஒரு உருவமும் பெயரும் கொடுக்கிறார்கள். இந்த உலகில் உள்ள மதங்களுக்கும் இறைவனுக்கும் எந்த தொடர்பும் இருக்காது.
ஒரு மாணவன் பள்ளியில் படிக்கும் பொழுது அவன் வாழ்க்கைக்குத் தேவையான பல விசயங்களை ஆசிரியர் கற்றுக் கொடுக்கிறார். கற்றுக் கொள்ளும் மாணவனும் கற்றுக் கொடுக்கும் ஆசிரியரும் மனிதர்கள் தானே. பள்ளிக்கூட பாடத்தை அறிந்து கொண்ட புரிந்து கொண்ட ஆசிரியர் புரியாத மாணவனுக்கு கற்றுக் கொடுப்பதைப் போன்று இறைவனின் இயக்கத்தையும் அவன் ஆற்றலையும் புரிந்து கொண்ட ஞானிகள் மதங்களையும் கோட்பாடுகளையும் சட்டதிட்டங்களையும் இறைவனின் பெயரால் உருவாக்கினார்கள்.
இறைவன் மதங்களை உருவாக்குவதில்லை, உருவாக்க வேண்டிய தேவையும் இல்லை. அவன் நினைத்தால் எதுவும் நடக்கக்கூடியது, அதைத் தடுக்கவும் எதிர்க்கவும் யாருக்கும் ஆற்றல் கிடையாது. இறைவன் ஒரு மதத்தை ஸ்தாபிக்க நினைத்தால் ஒரே நொடிக்குள் இந்த உலகில் உள்ள அனைவரும் அந்த மதத்தைப் பின்பற்றும்படி அவனால் செய்து விட முடியும். அல்லது அவன் மதத்தைப் பின்பற்றாத அனைவரையும் ஒரே நொடியில் அவனால் அழித்துவிட முடியும்.
மனிதர்கள் நிம்மதியாகவும் ஒழுக்கமாகவும் வாழ வேண்டும் என்பதற்காக சக மனிதர்களால் தான் மதங்கள் உருவாக்கப்பட்டன. எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளான இறைவனுக்கு எந்த மதமும் கிடையாது, எந்த உருவமும் கிடையாது. அனைவரும் தேடும் அனைவரும் விரும்பும், அன்பும், கருணையும், அரவணைப்பும், தான் இறைவனின் குணங்கள். இவை மூன்றையும் போதிக்கத்தான் மதங்கள் தோன்றின. இவை மூன்றையும் புரிந்து கொண்டவர்கள் தான் இறைவனைப் புரிந்து கொள்வார்.
Leave feedback about this