மனக்குழப்பம் உருவாகக் காரணங்கள்
மனதில் துன்பங்கள், மனக்குழப்பம், வேதனை, கவலை, உருவாகக் காரணங்கள். இந்த சமுதாய அமைப்பு பெரும்பாலும் ஒரு மனிதன் சுயமாக வாழ்வதற்கு கற்றுக் கொடுப்பதில்லை. ஒவ்வொரு மனிதனும் யாரோ ஒருவரை எதிர்பார்த்தோ, சார்ந்தோ, வாழப் பழக்கப் பட்டிருக்கிறார்கள். பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், நண்பர்கள், முதலாளி, கல்வி, செல்வம், வேலை, தொழில், சாதி, மதம், கடவுள், என்று எதையோ ஒன்றைச் சார்ந்து வாழவே மனிதர்கள் பழக்கப் படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
அவர்கள் சார்ந்திருந்த மனிதர்களோ விசயங்களோ அவர்களுக்குத் தக்க நேரத்தில் உதவவில்லை என்றாலும் அல்லது தக்க நேரத்தில் தக்க உதவி கிடைக்காது என்ற எண்ணம் தோன்றினாலும், அவர்கள் மனதில் சமமின்மையும், குழப்பமும் உருவாகிவிடுகிறது.
மன வேதனை உருவாகக் காரணங்கள்
மன வேதனை உருவாவதற்குக் காரணங்களாக இருப்பவை என்று, ஏமாற்றம், அவநம்பிக்கை, நம்பிக்கை துரோகம், உறவுகளின் பிரிவு, மரணங்கள், இழப்புகள், என பலவற்றைக் கூறலாம்.
குடும்பத்திலும் தொழிலிலும் சமுதாயத்திலும், ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்காத போது அதையே சிந்தித்து வேதனை உருவாகலாம். எனக்கு அது கிடைக்கவில்லை என்ற ஏக்கமும், என்னால் எப்போதுமே ஆசைப்பட்டதை அடைய முடிவதில்லை, அல்லது பழைய சம்பவங்களை மறக்க முடிவதில்லை என்ற எண்ணங்களும் சேர்ந்து மனதில் வேதனைகளை உருவாக்குகின்றன.
யாரோ ஒரு மனிதர் செய்த தவறுகளை நினைத்து, சிலர் தங்கள் மனதை வேதனைக்கு ஆளாகுகிறார்கள். தவறு செய்தவன் கூட நிம்மதியாக வாழும் போது, இவர் ஏன் நிம்மதி இல்லாமல் வாழ வேண்டும்?
மனக்கவலை உருவாகக் காரணங்கள்
மனக்கவலை பெரும்பாலும் ஒருவர் இழந்த மனிதரையோ, பொருளையோ, வாய்ப்பையோ நினைத்து வருந்தும் போது உருவாகிறது. இந்த உலகில் யாரும், எதுவும், யாருக்கும் நிரந்தரமில்லை, என்ற அடிப்படை உண்மையைக் கூட புரிந்துக் கொள்ளாமல். என்னிடம் அது இல்லை இது இல்லை அல்லது அது என்னை விட்டு தொலைந்துவிட்டது, என்று கவலையில் மூழ்குகிறார்கள்.
இந்த உலக வாழ்க்கை நமது கட்டுப்பாட்டில் இல்லை, நாம் விரும்புவதைப் போல் எல்லாம் இந்த வாழ்க்கை அமைந்துவிடாது, மேலும் நாம் ஆசைப்பட்ட அனைத்தையுமே அடைந்துவிட முடியாது, என்ற உண்மைகளை உணர்ந்து கொண்டால், வாழ்க்கையில் உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொண்டால் குழப்பங்களும் கவலைகளும் வேதனைகளும் நம்மை அண்டாது. வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.
Leave feedback about this