நோய்கள்

பசியில்லாமல் சாப்பிடுவதால் உண்டாகும் கேடுகள்

stomach a person holding a plate with a sandwich on it
#image_title

பெரும்பாலானோர் என்னிடம் கேட்கும் இரண்டு கேள்விகள்; “எதைச் சாப்பிட்டால் எனது நோய்கள் குணமாகும்?” மற்றும், “எதைச் சாப்பிட்டால் எனது தொந்தரவுகள் குறையும்?” என்பவைதான். நோய்கள் குணமாக வேண்டும் என்றால் எதையாவது சாப்பிட வேண்டும் என்று பெரும்பாலானோர் நம்புகிறார்கள். அல்லது மருந்தாகவாவது எதையாவது சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். உணவின் மீது அவ்வளவு பிரியம்.

பசி என்றால் என்ன?

நான் யாரிடமாவது “பசி அறிந்து உண்ணுங்கள்” என்று சொன்னால் அவர்கள் கேட்கும் அடுத்தக் கேள்வி, “பசி என்றால் என்ன? அது எப்படி இருக்கும் என்று சற்று விளக்குங்கள்” என்பார்கள், அல்லது “நான் பசித்துத்தான் சாப்பிடுகிறேன் என்று கூறுவார்கள்”. பசி என்றால் என்ன என்பதே பலருக்குத் தெரியவில்லை. இளம் பிராயம் முதலாக பசி உருவாகும் முன்பே சாப்பிடப் பழகிவிட்டதால், பசி என்ற உணர்வு எப்படி இருக்கும் என்று நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.

குறிப்பாக மலேசியாவில் அனைத்து இடங்களிலும் 24 மணி நேரமும் உணவகங்கள் திறந்திருக்கும், 24 மணி நேரமும் உணவு கிடைக்கும். இதுதான் இன்றைய மலேசிய மக்களின் சாபக்கேடு. உணவு கிடைக்கிறது என்பதற்காகவே கண்ட நேரங்களில் பசியில்லாமல், உடலுக்கு எந்த தேவையுமில்லாமல் சாப்பிடப் பழகிவிட்டோம். இது கண்டிப்பாக மாற்றிக்கொள்ள வேண்டிய ஒரு கேடான செயலாகும்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது, அற்றது போற்றி உணின்.

குறள் 942

உரை
இதற்கு முந்தைய வேளையில் உண்ட உணவு முழுதாக செரித்து விட்டதா என்பதை அறிந்து. இப்போது இருக்கும் பசியின் அளவையும் அறிந்து, பசியின் அளவுக்குத் தக்க உணவு உட்கொண்டால். இந்த உடலைப் பாதுகாக்க எந்த மருந்தும் தேவைப்படாது.

பசித்துப் புசி, இதுதான் நம் முன்னோர்கள் வகுத்த உணவுமுறை. இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல், வெறும் ஆசைக்காகவும்,
கடிகாரம் நேரத்தைப் பின்பற்றியும் உணவை உட்கொள்ளத் தொடங்கிவிட்டோம்.

பசியில்லாமல் சாப்பிடுவதால் உண்டாகும் கேடுகள்

1. முதலில் பசி இல்லாததால், வயிற்றில் ஜீரணச் சக்தி இருக்காது. உட்கொண்ட உணவு அதிக நேரம் வயிற்றில் தங்கி, வயிற்றிலேயே கெட்டுப்போய், இரசாயனங்களையும், கெட்ட வாயுக்களையும் உண்டாக்கும். இந்தச் சூழ்நிலை பல உடல் உபாதைகளை உண்டாக்கும்.

2. ஜீரணச் சக்தி குறைவாக இருக்கும் போது சாப்பிடுவதால், மற்ற உடல் உறுப்பு க்குச் செல்ல வேண்டிய சக்தி ஜீரணத்துக்கு வழிமாற்றி விடப்படும். அதனால் உடலில் மந்தமும், சோர்வும், சக்திக் குறைபாடுகளும் ஏற்படும். மூளை சோர்வடையும் அசதியும், தூக்கமும் உருவாகும்.

3. ஜீரணச் சக்தி இல்லாமல் சாப்பிடுவதால், உடலின் ஜீரண உறுப்புகள் மேலும் வலுவிழந்து, சோர்வடைகின்றன. இந்த நிலையில் ஜீரண உறுப்புகள் மேலும் மந்தமாக்கி, ஜீரணச் சக்தியை அறவே பாழாக்கிவிடும். இந்த நிலை சர்க்கரை நோயை உருவாக்கக் கூடும்.

4. ஜீரணச் சக்தி ஒழுங்காக இல்லாததால், வயிற்றில் செரிமானம் முறையாக நடக்காமல், செரிமானத்துக்குப் பின்னர் உருவாகும் சத்துக்கள், தரமற்றவையாகவும், உடலுக்கு கேடானவையாகவும் அமையும். இந்த நிலையே நீரிழிவு நோய், உடல் பருமன், உடல் வலி, வாயுக் கோளாறுகள் போன்ற பல தொந்தரவுகளை உருவாக்குகிறது.

பசி இல்லாமல் உண்ணாதீர்கள். பசி இல்லாமல் உட்கொள்ளும் உணவுகள் உடலுக்கு நன்மையைத் தருவதில்லை. அவை கெட்ட சக்திகளையும், தொந்தரவுகளையும், நோய்களையுமே உருவாக்குகின்றன. உணவைக் குறைத்து கொள்ளுங்கள். பசியை உணர்ந்து ஆரோக்கியமாக வாழுங்கள்.