குறள் 942
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு, அருந்தியது அற்றது போற்றி உணின்.
குறள் உரை
இதற்கு முந்தைய வேளையில் உட்கொண்ட உணவு முழுமையாக ஜீரணமாகி விட்டதா என்பதை அறிந்து. இப்போது இருக்கும் பசியின் அளவையும் அறிந்து, பசியின் அளவுக்குத் தக்க உணவை உட்கொண்டால். இந்த உடலை பாதுகாக்க எந்த மருந்தும் தேவைப்படாது.
குறள் விளக்கம்
மனிதர்களின் அனைத்து நோய்களுக்கும் மூல காரணமாக இருப்பது இரண்டு விசயங்கள் தான் முதலில் உடலில் உண்டாகும் சக்திக் குறைபாடு, மற்றது உடலில் சேரும் கழிவுகள். ஜீரணம் முறையாக நடைபெறாத பொழுது உட்கொண்ட உணவிலிருந்து உடலுக்குத் தேவையான சத்துக்கள் முழுமையாக கிடைப்பதில்லை. ஜீரணம் முறையாக நடக்காததால் செரிமானத்தின் பின் கழிவுகளும் முழுமையாக வெளியேறுவதில்லை.
அதனால்தான் திருவள்ளுவர் கூறுகிறார், முந்தைய வேளையில் உண்ட உணவு ஜீரணமாகி விட்டதா என்பதை அறிந்து. பசி உண்டான பிறகு உணவை உட்கொண்டால் இந்த உடலை பாதுகாக்க எந்த மருந்தும் தேவைப்படாது என்று. காரணம் நன்றாக பசி உண்டான பிறகு உணவை உட்கொண்டால், அவை எளிதில் ஜீரணமாகிவிடும் மேலும் உடலில் எந்த கழிவுகளும் தேங்காது.
திருவள்ளுவர் மருந்தெனக் குறிப்பிடுவது நாம் இன்றைய காலகட்டத்தில் பயன்படுத்தும் புட்டியில் அடைத்த, பதப்படுத்திய மருந்துகளையோ அல்லது ஆங்கில மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இரசாயன மருந்துகளையோ அல்ல. அவர் காலத்தால் பயன்பாட்டிலிருந்த, சித்த மருத்துவ மூலிகைகளை. அவர் காலத்தில் மருந்தாக பயன்படுத்தப்பட்டவை, எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாத இலைகள், வேர்கள், பட்டைகள் மற்றும் தாவரங்கள் தான்.
இந்த மூலிகைகளை நோயில்லாதவர்கள் உட்கொண்டால் கூட அவற்றை உடலானது உணவாக ஏற்றுக்கொள்ளும், எந்த பாதகமும் உருவாக்காது. இப்படி உணவாக செயல்படக்கூடிய மூலிகைகள் கூட தேவையில்லை, பசித்து மட்டும் உண்டாலே போது என்கிறார் திருவள்ளுவர்.
Leave feedback about this