யின் யாங் தத்துவம் (philosophy). சீனாவின் தாவோயிசத்தின் சின்னமான யின் யாங் இந்த உலகில் எதுவுமே தனியாக இல்லை என்ற தத்துவத்தையும்; இரண்டு எதிர் எதிர் விசயங்கள் ஒன்று சேருவதுதான் முழுமை என்ற தத்துவத்தையும் குறிப்பிடுகிறது. தாவோயிசம் அனைத்து விடயங்களிலும் முழுமை பெறுவதையே முன்னிறுத்துகிறது. யின் மற்றும் யாங் இணைவதே முழுமை என்றும் ஜோடியாக இணைவதே முழுமை என்றும் குறிப்பிடுகிறது.
ஒரு ஆணோ பெண்ணோ தனியாக வாழ்வது முழுமையான வாழ்க்கையாகாது. அந்த ஆணோ பெண்ணோ ஒரு எதிர் பாலினத்தைச் சார்ந்த ஜோடியுடன் திருமணத்தின் மூலமாக இணைவதே முழுமையான வாழ்க்கையாகிறது. ஒரு நாள் முழுவதும் பகலாக அல்லது வெளிச்சமாக இருந்தால் அந்த நாள் முழுமைப் பெறாது. அல்லது முழு நாளும் இரவு சூழ்ந்து இருந்தாலும் அந்த நாள் முழுமை பெறாது. பாதிப் பகலும் பாதி இரவும் ஒன்றாக இணையும் போதுதான் ஒரு நாள் முழுமை பெறுகிறது. சூரியன் மட்டுமே நாள் முழுவதும் இருந்தால் அது முழுமையாகாது. சூரியனும் சந்திரனும் பாதி அளவு நாளை பிரித்துக் கொள்வதே முழுமையான சுழற்சியாகிறது.
ஒரு பூ மலர்ந்திருந்தாலும், பார்வைக்கு அழகாக இருந்தாலும் அது முழுமை பெற்ற மலராகாது. அந்த பூவுடன் வாசனையும் சேரும்போதுதான் அது ஒரு முழுமை பெற்ற மலராக இருக்கும்.
மனித உடலில், கை, கால், தலை, மற்றும் உடலின் மற்ற உள்ளுறுப்புகள் அனைத்தும் இருந்தாலும், உயிர் இல்லாவிட்டால் அதை மனிதனாக கருத முடியாது. ஒரு உடலில் உயிர் இருந்தால் மட்டுமே அதனை மனிதன் என்று குறிப்பிட முடியும். அதைப் போன்றே உயிர் மட்டுமே இருந்து, உடல் இல்லாவிட்டாலும் அதுவும் மனிதன் ஆகாது.
இந்த உலகில் எதுவுமே தனியாக இருக்காது, தனியாக இருக்கும் எதுவுமே முழுமையாகாது. இரு வெவ்வேறான விசயங்கள், வெவ்வேறு தன்மைகள் ஒன்று சேர்வதே இந்த உலகில் முழுமையாகும். உலக வாழ்க்கையில் வளர்ச்சி என்பதை விடவும் முழுமை என்பதே முக்கியம்.