யின் யாங் சின்னம். ஒரு வட்டம், அதில் இரு பிரிவுகள். ஒரு பகுதி கருப்பு, ஒரு பகுதி வெள்ளை. கருப்பு பகுதியில் ஒரு வெள்ளைப் புள்ளி. வெள்ளை பகுதியில் ஒரு கருப்புப் புள்ளி. வெள்ளையும் கருப்பும் சுழல்வதைப் போன்ற ஒரு உருவ அமைப்பு. இதுதான் யின் யாங் சின்னம்.
இரு வெவ்வேறு தன்மைகள் சேரும் போது தான் ஒரு முழுமை உருவாகிறது. ஆனாலும் அந்த முழுமையிலும் சில குறைகள் இருக்கும். குறையில்லாமல் முழுமைபெற்ற எதுவுமே இந்த உலகில் இருக்காது, அனைத்திலும் ஏதாவது ஒரு வகையான குறை இருக்கும். அந்த குறையும் நிறையும் சேர்வதுதான் முழுமை. வெவ்வேறு தன்மைகள் இணைவது ஒரு வகையான முழுமை, குறைகளுடனும் வேற்றுமைகளுடனும் இணக்கமாக வாழ்வது மற்றொரு வகையான முழுமை. வாழ்க்கையின் முழுமைதான் யின் யாங் தத்துவம்.
உதாரணத்திற்கு இரவும் பகலும் சேரும்போது ஒரு முழுமையான நாள் உருவாகிறது. ஆனாலும் பகலில் எல்லா இடங்களிலும் வெளிச்சம் படர்வதில்லை, இரவில் எல்லா இடங்களிலும் இருள் படர்வதில்லை. வெளிச்சமான பகலின் பகுதியும் இருண்ட இரவின் பகுதியும் சேருவதுதான் முழுமையான ஒரு நாள் உருவாக காரணமாக அமைகிறது.
பகல் வேளையிலும் சில இடங்கள் இருட்டாகவே இருக்கும் அல்லவா? அதனால் வெள்ளையான பகுதியில் ஒரு கருப்பு புள்ளி. இரவிலும் சில இடங்கள் வெளிச்சமாக இருக்கும் அல்லவா? அதனால் கருப்பான பகுதியில் ஒரு வெள்ளைப் புள்ளியைக் குறியீடாக காட்டுகிறார்கள்.
Leave feedback about this