வெற்றியின் சூத்திரம். இந்த உலகில் மாபெரும் வெற்றியைக் கண்ட நூறு நபர்களின் வாழ்க்கை வரலாற்றினை ஆராய்ந்து பாருங்கள். அவர்களின் வெற்றியானது, வியாபாரம், பொருளாதாரம், அரசியல், ஆன்மீகம், மருத்துவம், பொருளியல், கண்டுபிடிப்பு, என்று எந்தத் துறையைச் சார்ந்ததாகவும் இருக்கலாம். அவர்கள் எவ்வாறு வெற்றி பெற்றார்கள்? அந்த வெற்றியை அடைவதற்கு எந்தப் பாதையை, எந்த ஒழுக்கத்தை பின்பற்றியிருப்பார்கள்?
திருச்சியிலிருந்து சென்னைக்குச் செல்வதற்கு ஓரிரு பாதை தான் இருக்கும். வாகனத்துக்கு ஏற்ப அனுபவமும் கால அவகாசமும் மாறுபடலாம், ஆனால் திருச்சியிலிருந்து சென்னைக்குச் செல்ல விரும்பும் அனைவருக்கும் அதுதான் பாதை. இந்த உதாரணத்தை போன்று வாழ்க்கையில் வெற்றிபெற்ற அனைவருக்கும் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப வசதி வாய்ப்பும் அனுபவமும் மாறுபடலாம் ஆனால் பெரும்பாலும் அவர்கள் பின்பற்றிய வெற்றியின் சூத்திரங்கள் ஒரே வகையாகத் தான் இருக்கும்.
வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும், பல்வேறு அனுபவங்களில் இருந்து பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொண்டு, அவற்றை வாழ்நாள் முழுமைக்கும் கடைப்பிடித்தது தங்களின் இலக்கை அடைந்திருப்பார்கள்.
வாழ்க்கையில் வெற்றியை நோக்கி முயற்சிக்கும் அனைவரும் பயணிக்கும் பாதை ஒன்றுதான். மாபெரும் வெற்றியைக் கண்டவர்களின் வெற்றிக்கு அடிப்படை காரணமாக இருந்தது; இதுதான் எனது இலக்கு என்ற தெளிவும், என் இலக்கை என்னால் அடைய முடியும் என்ற திடமான நம்பிக்கையும் மன உறுதியும் தான்.
முதலில் நீங்கள் எதை நோக்கிப் பயணிக்கிறீர்கள் என்ற தெளிவு இருக்க வேண்டும். எது உங்கள் இலக்கு? நீங்கள் எதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்பது உங்களுக்கு தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் இலக்கை தேர்வு செய்ததும், அந்த இலக்கை அடைவதற்குத் தேவையான சரியான செயல்திட்டம் ஒன்றை தீட்டிக்கொள்ள வேண்டும். உங்கள் அனுபவம், திறமை, வசதி மற்றும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி நீங்கள் அடையக் கூடியதாக உங்கள் இலக்கு இருக்க வேண்டும்.
வசதி வாய்ப்புகள் இல்லாதவர்கள் முதலில் சிறிய அளவில் தொடங்க வேண்டும். வகுத்த செயல் திட்டத்தை சரியான நேரத்தில், சரியான நபர்களைக் கொண்டு செயல்படுத்த வேண்டும். எந்த செயலையும் சரியான நேரம், காலம், சூழ்நிலை பார்த்துச் செயல்படுத்த வேண்டும். எந்தக் காலத்திலும், எந்தக் காரணத்தைக் கொண்டும் அவசியமான விசயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது.
ஒவ்வொரு நாளும் உங்கள் இலக்கைப் பற்றிய சிந்தனை இருக்க வேண்டும். விடாமுயற்சியுடன் மீண்டும் மீண்டும் முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும். உடல் தளரும் அளவுக்கு உழைக்க வேண்டிய சூழ்நிலை உருவானாலும், எந்தச் சூழ்நிலையிலும் மனம் தளர்ந்துவிடக் கூடாது.
மனம் தளரும் சூழ்நிலை உருவானால் உங்கள் திட்டமும் இலக்கும் நினைவுக்கு வர வேண்டும். உங்கள் எதிர்காலத்தை, லட்சியத்தை நினைத்துப் பார்த்து மீண்டும் உற்சாகம் பெற வேண்டும். உங்கள் முயற்சிக்கும், திட்டத்துக்கும், இலக்கை அடைவதற்கும், உதவக்கூடிய வழிகாட்டக்கூடிய சரியான நபர்களுடன் கூட்டுச் சேர வேண்டும், இணைந்து இயங்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் உங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். தினம் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். காலநிலை மாற்றத்திற்கு ஏற்பவும் உங்கள் துறையில் நடக்கும் மாற்றங்களுக்கு ஏற்பவும் உங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் பின் தங்கிவிடக் கூடாது.
Leave feedback about this