எங்கள் வீட்டில் நடந்த அமானுஷ்ய அனுபவம். எனக்கு திருமணமான புதிதில், நாங்கள் மலேசியாவில், ஜொகூர் பாருவில் ஒரு வீட்டில் குடியிருந்தோம். அது வரிசையாக வீடுகள் அமைக்கப்பட்ட புதிய குடியிருப்புப் பகுதி. அந்த குடியிருப்புப் பகுதியில் அவ்வளவாக மக்கள் நடமாட்டம் இருக்காது. எங்கள் வீட்டின் பின்புறத்தில் ஒரு பெரிய புற்கள் மண்டிய திடல் இருக்கும். அந்த வீட்டில் குடியேறிய சில நாட்களில் சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடைபெறத் தொடங்கின.
பொழுது சாயும் நேரங்களில், வீட்டின் பின்புறத்தில் யாரோ மண்வெட்டியால் வெட்டுவதைப் போன்று சத்தம் கேட்கும். வீட்டில் யாரோ நடமாடுவதைப் போன்ற ஓசைகள் கேட்கும். குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் யாரோ நாற்காலியை இழுப்பதைப் போன்றும், குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து மூடுவதைப் போன்றும், குளியலறையை யாரோ பயன்படுத்துவதைப் போன்றும் ஓசைகள் கேட்கும். அவற்றை நான் அதிகமாக அனுபவித்ததில்லை. என் மனைவிக்கு இந்த அனுபவங்கள் வருகின்றன என்று அடிக்கடி என்னிடம் கூறுவார்.
எப்போதும் வேலை முடிந்து இரவு பதினொன்று பன்னிரண்டு மணிப் போல தான் வீட்டுக்குத் திரும்புவேன். 12 மணிக்கு மேல் வீடு திரும்பியதும் கணினியில் அமர்ந்து இணையப்பக்கம் செய்வது, எழுதுவது, வாசிப்பது, என்று எதையாவது செய்துக் கொண்டிருப்பேன். அந்த நேரங்களில் என்னைச் சுற்றி பல ஆவிகள் நிற்பதை என்னால் தெளிவாக உணர முடியும். என் கணினி அறை வீட்டின் பின்புறத்தைப் பார்த்ததைப் போன்று அமைந்திருந்தது.
என் வீட்டுக்குப் பின்னால் மற்ற வீடுகள் எதுவும் இல்லாமல் அடர்ந்த புற்கள் மண்டிய ஒரு காலி நிலமாக இருந்தது. வீட்டின் ஜன்னலில் இருந்து பல அமானுஷ்ய உயிரினங்கள் எட்டிப் பார்ப்பதும் என்னைச் சுற்றி ஆவிகள் நின்று வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாக இருந்தது. ஆனால் ஆச்சரியம் எனக்கு பயமோ பதற்றமோ ஏற்பட்டதில்லை, நாளடைவில் அது எனக்குப் பழகிவிட்டது.
ஒரு நாள் சாயங்காலம் 4 மணி இருக்கும் நான் வீட்டுக்கு ஓய்வெடுக்கச் சென்றேன். படுப்பதற்கு முன்பாக 7 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டே உறங்கச் சென்றேன். சரியாக மாலை 7 மணிக்கு என் அறைக் கதவை என் மனைவி தட்டினால். நான் மதியம் உறங்கும் போது அவள் எழுப்பிவிடுவது வழக்கம். எழுந்துச் சென்று கதவைத் திறந்தால் அங்கு யாருமில்லை. அப்போதுதான் என் நினைவுக்கு வந்தது என் மனைவி ஊரில் இல்லை என்பதும் நான் தனியாகத்தான் வீட்டில் இருக்கிறேன் என்பதும்.
என் வீட்டிலிருந்த ஆவிகள் என் குடும்பத்தாரை எந்த வகையிலும் தொந்தரவு செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எங்கள் வீடு இருந்த நிலமும் வீட்டைச் சுற்றிய நிலங்களும் முன்காலத்தில் காடுகளாகும் சுடுகாடாகவும் இருந்த நிலங்கள் என்று கேள்விப்பட்டேன். அந்த காடுகளையும் இடுகாட்டையும் அழித்து வீடுகளைக் கட்டியதால் அந்த காட்டிலும் இடுகாட்டிலும் இருந்த ஆவிகள் வீடுகளில் குடியேறின. எங்கள் வீட்டில் மட்டுமின்றி அங்கிருந்த பல வீடுகளில் ஆவி மற்றும் அமானுஷ்யத்தின் தொந்தரவுகள் இருந்தன.