வயதுக்கும் மரணத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 என்று ஒரு மனிதனின் வயதை எண்ணுவது, அவன் எத்தனை வருடங்களாக இந்த உலகில் வாழ்கிறான், அவனுக்கு எவ்வளவு அனுபவம் இருக்கும் என்று கணக்கிடுவதற்காக தானே ஒழிய. அவனது மரண தேதியை கணக்கிடுவதற்காக அல்ல.
வயதுக்கும் நோய்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை அதைப்போலவே வயதுக்கும் மரணத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மரணம் எப்பொழுதும், எப்படியும், யாருக்கும் வரலாம். மரணம் மனிதனை நெருங்குவதற்கு எந்த வயதும் தகுதியும் தேவையில்லை, யாருக்கும் எப்போதும் வரலாம்.
யாராவது மரணித்து விட்டால், அவர் ஏன் மரணித்தார் என்று ஒரு சிலர் காரணம் கேட்பார்கள். சிலர் ஒருவரைக் குறிப்பிட்டு அவருக்கு எந்த நோயும் இல்லை, எந்த கெட்ட பழக்கங்களும் இல்லை ஆனால் திடீரென்று மரணமடைந்து விட்டார், ஏன் என்று கேட்பார்கள். ஒரு சிலர் அவன் சிறுகுழந்தை நான்கு ஐந்து வயதுதான் இருக்கும் ஆனால் திடீரென்று மரணமடைந்து விட்டான், ஏன் என்று கேட்பார்கள்.
இவர்கள் அனைவருக்கும் ஒரே பதில்தான், மரணம் நடக்க எந்தக் காரணமும் தேவையில்லை, மரணத்திற்கு வயது வரம்பு கிடையாது. மரணம் யாருக்கும் எப்போதும் வரலாம். இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு குறிப்பிட்ட வாழ்நாள் அளவு கொடுக்கப்படுகிறது. அந்த அளவு ஒவ்வொரு நபருக்கும் மாறுபடுவதால் ஒரே அளவான வாழ்நாள் அனைவருக்கும் இருக்காது. ஒரு மனிதன் இந்த உலகத்தில் பிறக்க ஒரு காரணமும் நோக்கமும் இருக்கும், அந்த நோக்கம் நிறைவேற எவ்வளவு காலம் தேவையோ, அவ்வளவு வாழ்நாள் மட்டுமே கொடுக்கப்படும். வந்த நோக்கம் நிறைவேறியதும், மரணம் சம்பவிக்கும்.
பிறந்த நோக்கம் நிறைவேற சிலருக்கு 90 ஆண்டுகள் ஆகலாம், சிலருக்கு 60 ஆண்டுகள் ஆகலாம், சிலருக்கு 40, சிலருக்கு 20, சிலருக்கு 10, அவ்வளவு ஏன் ஒரு சிலருக்கு 3 வயதுக்குள்ளாகவே பிறந்த நோக்கம் நிறைவேறி விடலாம். ஒரு உண்மையைச் சொல்கிறேன் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள், மனிதன் இந்த மண்ணில் பிறந்த அன்றே மரணிக்கத் தொடங்கி விடுகிறான். ஒவ்வொரு நாளும் அவன் உறங்குவது ஒரு சிறு மரணம்தான். மரணம் எப்படி இருக்கும் என்பதற்கான ஒத்திகைதான் தூக்கம்.
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி, விழிப்பது போலும் பிறப்பு
குறள் 339
ஒரு உடலில் குடிகொண்டிருந்த ஆன்மா ஒரு நெடுந்தூக்கம் போடுவதுதான் மரணமே ஒழிய மரணம் ஒரு முடிவு கிடையாது. உறங்குபவன் எப்படி மறுபடியும் விழிப்பானோ அதைப்போல் மரணிப்பவனும் மறுபடியும் அடுத்த வாழ்க்கைக்குச் செல்வான். அந்த வாழ்க்கை எங்கே எப்படி இருக்கும் என்று நான் சொல்ல விரும்பவில்லை. அது அவரவர் ஞானத்தையும் நம்பிக்கையையும் பொறுத்தது. ஆனால் மறுபடியும் சொல்கிறேன் மரணம் ஒரு முடிவில்லை. வாழ்க்கை முடியாது தொடரும்…!
Leave feedback about this