வயதானால் நிச்சயமாக நோய்கள் உண்டாகுமா? என்றால், உண்டாகாது! வயதானால் நிச்சயமாக நோய்கள் உண்டாகும் என்பது வெறும் கற்பனையும் கட்டுக்கதையும் மட்டுமே. வயது என்பது மனிதனின் அனுபவத்தின் எண்ணிக்கை அளவு மட்டுமே, தேய்மானத்தின் அளவு அல்ல. ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் மனிதனைப் படைத்த இறைவன் தவறு செய்ய வழியே கிடையாது. இறைவன் தவறு செய்யும் பட்சத்தில் அதைச் சரிசெய்யக் கூடியவரும் கிடையாது.
இன்றைய மனிதர்கள் அனுபவிக்கும் அத்தனை நோய்களுக்கும் அவர்களின் பழக்கவழக்கங்கள் மட்டுமே காரணம். இறைவன் சோதிக்கிறார், இறைவன் பயிற்சி கொடுக்கிறார் என்பதெல்லாம் மனிதனாக செய்துகொள்ளும் கற்பனை மட்டுமே. உண்மையில் இறைவன் மனிதர்களுக்கு எந்த துன்பத்தையும், நோய்களையும் கொடுப்பதில்லை. மனிதர்கள் அனுபவிக்கும் அனைத்து துன்பங்களுக்கும் அவர்கள் மட்டுமே காரணம்.
மனிதர்களின் தவறான உணவு முறையும், தவறான வாழ்க்கை முறையும் தான் அனைத்து நோய்களுக்கும் காரணமாக இருக்கிறது. உணவு முறைகளையும் வாழ்க்கை முறைகளையும் மாற்றி அமைத்துக் கொண்டால் நிச்சயமாக நோய்கள் அண்டாது. ஒருவேளை தற்போது நோய் இருந்தாலும் நிச்சயமாகக் குணமாகிவிடும்.
நமது புராணங்கள் மற்றும் இதிகாசங்களைப் பாருங்கள். நம் முன்னோர்கள் 100 வயதில் 120 வயதில் போர்களில் போரிட்டு இருக்கிறார்கள். 100 வயதுக்கு மேல் திருமணம் செய்தார்கள், 100-200 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்று அவை கூறும். இதிகாசங்கள் புராணங்கள் எல்லாம் வெறும் கற்பனையே என்று சொல்பவர்களுக்குச் சொல்கிறேன், இல்லாத ஒன்றை யாராலும் கற்பனை செய்ய முடியாது. உதாரணத்துக்குச் சொல்கிறேன், புலிக்கு 5 கால், 3 தலை, என்று கொஞ்சம் கூடுதலாக சொல்லலாமே ஒழிய இல்லாத ஒரு விலங்கைக் கற்பனை செய்து இருப்பதைப் போல் காட்டமாட்டார்கள்.
மனிதன் 100 வயதிலும் ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் வாழ முடியுமா என்பதைக் கண்டறிய பெரிய ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை, உங்கள் முன்னோர்களைப் பாருங்கள். உங்கள் குடும்பத்திலேயே 2-3 தலைமுறைகளுக்கு முன்பாக 100 வயதுக்கு மேல் வாழ்ந்தவர்கள் இருப்பார்கள். என் வார்த்தையைக் கவனியுங்கள், நான் வாழ்ந்தார்கள் என்று சொன்னேனே ஒழிய இருந்தார்கள் என்று சொல்லவில்லை. படுத்த படுக்கையாக இருப்பவர்களைக் கூட நாம் இருக்கிறார்கள் என்று சொல்லலாம் ஆனால் ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் இருந்தவர்களைத்தான் வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியும்.
Leave feedback about this