வங்கியின் மின் பரிவர்த்தனையும் கட்டுப்பாடும். உங்களிடம் ஒரு லட்சம் பணம் இருந்தால் அது உங்கள் சொத்து, நீங்கள் அதை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதே பணம் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்தால் அரசாங்கமோ வங்கியோ அந்தத் தொகையை உங்களுக்குத் தர மறுத்தால் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. இந்திய அரசாங்கம் ஆயிரம் மற்றும் ஐந்நூறு ரூபாய் நோட்டுக்களை மதிப்பற்றவை என்று அறிவித்த போது தனது சொந்தப் பணத்தை வங்கியிலிருந்து பெறுவதற்காக மக்கள் நடுத்தெருக்களில் வெயிலில் வரிசையில் நின்றதும், எத்தனை கோடி பணம் வங்கிக் கணக்கில் இருந்தாலும் ஒரு நபர் இவ்வளவுதான் வங்கியிலிருந்து எடுக்க முடியும் என்று அரசாங்கம் கட்டுப்படுத்தியதும், இதற்குச் சான்றுகள்.
தற்போது ஒரு அரசாங்க அலுவலகம் அல்லது அரசாங்க பணியாளர் உங்களுக்கு சரியான சேவை வழங்கவில்லை என்றால், உங்களால் கேள்வி எழுப்ப முடியும். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய சேவைகளை, உரிமைகளைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள முடியும். மின்னியல் அரசாங்கத்தில் இது நடக்காது, எவ்வளவு அவசரமான வேலையாக இருந்தாலும் நீங்கள் மின்னஞ்சலுக்காக காத்திருக்க வேண்டும். எவ்வளவு அவசரமான அல்லது தலை போகின்ற காரியமாக இருந்தாலும் உங்களால் மின்னஞ்சல் மட்டுமே அனுப்ப முடியும்.
கம்ப்யூட்டர், இன்டர்நெட், நெட்வொர்க்கிங், போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ஆதார் அட்டை, அடையாள அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வாகன உரிமம் போன்றவற்றில் உள்ள உங்களின் விவரங்களைக் கொண்டு உங்களுக்கு எதை வேண்டுமானாலும் கிடைக்க விடாமல் செய்ய அரசாங்கத்தால் முடியும். நல்ல அரசாங்கமும் நல்ல தலைவர்களும் அமைந்தால் பெரிய பாதிப்பு ஒன்றும் இருக்காது. அதே நேரத்தில் சுயநலவாதிகள் தலைவர்களாக இருந்து அவர்களின் தலைமையில் அரசாங்கம் அமைந்தால் என்ன நடக்கும் என்பதைக் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
அரசாங்கத்தை எதிர்க்கும் அல்லது எதிர்க் கேள்விகள் கேட்கும் யாருக்கு வேண்டுமானாலும் அத்தனை அரசாங்க சேவைகளையும் தடை செய்ய அரசாங்கத்தால் முடியும். அவர்களின் வங்கிக் கணக்கு, சொத்து, பாஸ்போர்ட், அடையாள அட்டை என்று எதை வேண்டுமானாலும் அரசாங்கமோ அல்லது மற்ற நிறுவனங்களோ தடை செய்ய முடியும். உதாரணத்துக்குச் சொல்வதானால் ஒரு கோடீஸ்வரனின் சொத்துக்களையும் வாங்கி பரிவர்த்தனைகளையும் முடக்குவதன் மூலமாக ஒரு வேளை சோற்றுக்கும் வழியில்லாமல் செய்துவிட முடியும்.
உங்கள் கையில் பணம் இருக்கும் வரையில் அல்லது தங்கம் இருக்கும் வரையில் நீங்கள் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம். அதே வங்கியில் இருந்தால் அது உங்கள் சொத்து அல்ல. இடையில் இந்திய அரசாங்கம் தனி நபர்கள் வைத்திருக்கும் தங்கத்தின் அளவுக்கு வரையறை கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
முடிந்த வரையில் உங்களின் கையிருப்பை பணமாக இல்லாமல் தங்கமாகவோ, வெள்ளியாகவோ வைத்திருங்கள், அவற்றின் பாதுகாப்பும் மிகவும் அவசியம்.