வாழ்க்கையின் துன்பங்களை எதிர்கொள்வது எப்படி? கஷ்டம், நஷ்டம், கடன், சோதனை, துன்பம், துயரம், துரோகம், நோய், வலி, என்று ஏதாவது ஒரு வேதனையுடன் தான் பெரும்பாலான மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வெளிப்படையாகச் சொல்வதானால் மனிதப் பிறப்பு என்பது, ஆன்மாக்களுக்கு வழங்கப்படும் பயிற்சியாக இருப்பதனால், வேதனைகளை அனுபவிக்காத மனிதர்களே இந்த உலகில் இருக்க மாட்டார்கள். வேறு வார்த்தையில் கூறினால், வேதனைகளை அனுபவிக்கத் தேவையில்லாத ஆன்மாக்கள் மனிதப் பிறப்பு எடுக்கமாட்டாது.
இயற்கையின் அமைப்பில், உலக வாழ்க்கையில் இன்பம் துன்பம் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. மனித வாழ்க்கையில் நடக்கும் அத்தனை விசயங்களும் அவனுக்குப் பாடமாகத்தான் அமைகின்றன. மனித வாழ்க்கையின் இன்பங்களும் துன்பங்களும் தனி மனிதனின் மனதில் தான் விளைகின்றன. அன்றாட வாழ்க்கையில் கடந்து செல்லும் நிகழ்வுகளை அவன் எவ்வாறு பார்க்கிறான்? எவ்வாறு எடுத்துக் கொள்கிறான்? என்பதை பொறுத்துத்தான் அது இன்பமாகவும் துன்பமாகவும் அவன் அனுபவம் செய்கிறான்.
வேதனை, துன்பம், துயரம் போன்ற சொற்களுக்கு ஒவ்வொரு மனிதனின் புரிதலிலும் அர்த்தம் வெவ்வேறாக இருக்கலாம். இவற்றின் அர்த்தங்கள் ஒவ்வொரு மனிதனின் புரிதலுக்கும் ஆன்மப் பக்குவத்துக்கும் ஏற்ப மாறுபடும். ஒருவர் பெரும் இன்பம் அல்லது பெரும் துன்பம் என்று கூறும் விசயங்கள் இன்னொரு மனிதனின் அன்றாட வாழ்க்கையாக இருக்கலாம். ஒரு மனிதன் வேதனையில் வாடும் அல்லது துன்பப்படும் ஒரு விசயம் இன்னொரு மனிதனுக்கு தினம் கடந்து செல்லும் ஒரு நிகழ்வாக இருக்கலாம்.
ஒரு மனிதன் துன்பம் என்று நம்பும் விசயம் இன்னொரு மனிதனுக்கு அது ஒரு உழைப்பு, முயற்சி அல்லது பயிற்சி என்று புரியலாம். இப்படி ஒவ்வொரு மனிதனின் புரிதலுக்கும் ஏற்ப தான் அவனின் வாழ்க்கையும் வாழ்க்கையின் அனுபவங்களும் இருக்கும்.
வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ஒரு துன்பமாக கஷ்டமாக பார்க்காதீர்கள். அதைக் கண்டு அச்சமடையாதீர்கள், வேதனைப் படாதீர்கள். வாழ்க்கையில் விரும்பத்தகாத அல்லது வேதனை தரக்கூடிய விசயங்கள் நடந்தாலும் கண்களை நன்றாகத் திறந்து அந்த நிகழ்வைக் கவனியுங்கள். கஷ்டம், கடன், சோதனை, துன்பம், துயரம், துரோகம், நோய், வலி என்று எதைக் கண்டும் ஓடாதீர்கள். நின்று நிதானமாக என் வாழ்க்கையில் இது எதனால் நடந்தது என்று சிந்தியுங்கள்.
இதற்கு உடனடி தீர்வு என்ன என்று தேடாதீர்கள், இதிலிருந்து நான் எப்படியாவது வெளிவர வேண்டும் என்று அவசரப்படாதீர்கள். நிதானம் இல்லாத நிலையிலும் அவசரப்படும் நிலையிலும் சரியான சிந்தனை இருக்காது, சரியான தீர்வும் கிடைக்காது.
கஷ்டம், கடன், சோதனை, துன்பம், துயரம், துரோகம், நோய், வலி என்று எது உருவானால் இதற்கு மூலம் என்ன? எதனால்? எங்கிருந்து இது தொடங்கியது என்று சிந்தியுங்கள். இந்த துன்பம் எனக்கு உண்டாக நான் என்ன தவறு செய்தேன் என்று சிந்தியுங்கள். ஒவ்வொரு பிரச்சனையையும் தெளிவாகச் சிந்தித்துச் செயல்படும் போது அதற்கான தீர்வும் அதைக் கடந்து செல்லும் வழியும் நம்முன் தானாக விரியும். தெளிவான சிந்தனையும் நிதானமும் இருந்தால் அத்தனை துன்பங்களும் பனிபோல் விலகும் வாழ்க்கை மலரும்.