வாழ்க்கை

வாழ்க்கையில் துன்பங்கள் உண்டாவது ஏன்?

வாழ்க்கையில் துன்பங்கள் உண்டாவது ஏன்? பிரச்சனைகளின் அளவும், சோதனைகளின் அளவும், அவற்றின் விளைவுகளும் ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடலாம் ஆனால், இந்த உலகில் சோதனைகளை அனுபவிக்காத மனிதர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். எல்லா மனிதர்களும் அவர்களின் வாழ்க்கையின் நோக்கங்களுக்கு ஏற்ப சிலபல சோதனைகளை அனுபவம் செய்கிறார்கள்.

மனிதர்கள் அனுபவிக்கும் சோதனைகள் அவர்களுக்கு சில படிப்பினைகளை வழங்குவதற்காக, அவர்களின் தாங்கும் திறனைக் கணக்கில் கொண்டே வழங்கப்படுகிறது. அதனால் சமாளிக்க முடியாத சோதனைகளோ, மனிதனையே வீழ்த்திவிடும் அளவுக்கு சோதனைகளோ, வாழ்க்கையே முடிந்துவிடும் அளவுக்கு சோதனைகளோ, யாருக்கும் வருவதில்லை.

உலக வாழ்க்கையின் விதியை மீறுவது, கர்மா, தண்டனை, பயிற்சி, என பல்வேறு காரணங்களுக்காக மனிதர்களுக்கு சோதனைகள் உண்டாகின்றன. மேலே குறிப்பிட்ட காரணங்களால் உண்டாகும் சோதனைகளைக் கண்டு அஞ்சி, பயத்தினாலும் பதற்றத்தினாலும் அறியாமையினாலும் மனிதர்கள் துன்பங்களில் சிக்கிக் கொள்கிறோம்.

சோதனைகள் வேறு துன்பத் துயரங்கள் வேறு. இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு வகையான சோதனையை அனுபவம் செய்து கொண்டுதான் இருப்பான். இதுதான் உலக நியதி, அதை மாற்ற இயலாது. ஆனால் அந்த சோதனைக்கு அவன் எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறான் என்பதைக் கொண்டுதான், அந்த சோதனை துன்பமாகவும், துயரமாகவும், வேதனையாகவும் மாறுகிறதா? அல்லது வாழ்க்கை பாடமாகவும் அனுபவமாகவும் மட்டுமே இருக்கிறதா? என்பது முடிவாகிறது.

தெளிவாகவும், நிதானமாகவும், நம்பிக்கையுடனும், எதிர் கொள்பவர்களுக்கு எந்த சோதனையாக இருந்தாலும் பனிபோல் விலகிவிடும். அதை அவர்கள் எளிதாக சமாளித்துக் கடந்து செல்வார்கள். பயம், பதற்றம் மற்றும் நம்பிக்கையின்மையே சாதாரண சோதனைகளைக் கூட சமாளிக்க முடியாமல் பலர் துவண்டு போவதற்குக் காரணமாக அமைகிறது.

மனிதர்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு அவர்கள் தான் காரணம் என்பது அத்தனை மதங்களும் ஞானிகளும் கூறும் கூற்றாகும். வாழ்க்கையில் சோதனைகள் உண்டாவது இயல்பு, ஆனால் அவற்றைக் கண்டு வாடுவதும் அவற்றை இயல்பாக கடந்து செல்வதும் நமது கைகளில் தான் உள்ளது.

நமது வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு சோதனையும், தடங்கல்களும் நமக்குப் பாடமாக மற்றும் பயிற்சியாக மட்டுமே வருகின்றன என்பதைப் புரிந்து கொண்டு தைரியமாக எதிர்கொண்டால். வந்த சுவடு கூடத் தெரியாமல் எல்லா துன்பங்களும் தடங்கல்களும் மறைந்து போகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *