வாழ்க்கை

வாழ்க்கையில் தடைகளும் தடங்கல்களும்

வாழ்க்கையில் தடைகளும் தடங்கல்களும். திருவிழாவிற்கு குழந்தையை அழைத்துச் செல்லும்போது, தகப்பன் குழந்தையின் கையை இறுகப் பற்றிக்கொள்வான். குழந்தை அதை ஒரு தடையாக எண்ணும், தான் நினைத்தவாறு விரும்பியவாறு ஓட முடியவில்லை, தான் விரும்பியவற்றை அனுபவிக்க முடியவில்லை என்று வருந்தும். தகப்பன் தன் கையை பிடித்திருப்பது தன் நலன் கருதிதான் என்பதை குழந்தை உணராது.

தன் கரத்தை பற்றியிருப்பது யார் என்பதை உணராமல், எனக்குச் சுதந்திரம் இல்லை, என்னால் அதை அடைய முடியவில்லை, இதை அடைய முடியவில்லை, எனக்கு இது கிடைக்கவில்லை, அது நடக்கவில்லை, நான் நினைத்த வாழ்க்கையை வாழ முடிவதில்லை என்று பலர் புலம்புகிறார்கள். என்றோ செய்த நல்வினைகளின் காரணமாக இறைவன் உங்களைப் பாதுகாக்கின்றான் ஆனால் மாயையில் மயங்கி அதை குறை அல்லது பலவீனம் என்று எண்ணுகிறீர்கள்.

திருவிழாவில் தொலைந்துவிடாமல் பாதுகாப்பாக மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக தகப்பன் குழந்தையின் கையை பிடித்திருப்பதைப் போன்று, நாம் இந்த உலக மாயையில் தொலைந்துவிடாமல் இருப்பதற்காக இறைவன் நம்மைப் பற்றி இருக்கிறான். குழந்தை கேட்பதை எல்லாம் தகப்பன் வாங்கி தருவதில்லை, அந்த குழந்தைக்கு நன்மையான தேவையான விசயங்களைத் தருவதற்கு தகப்பன் தயங்குவதுமில்லை. குழந்தைக்குத் தேவையான விசயங்களை சரியான நேரத்தில் வாங்கி கொடுக்கும் தகப்பனை போன்று, இறைவன் நமது தேவைகளைச் சரியான நேரத்தில் நிறைவேற்றுவான்.

வாழ்க்கையில் தடைகள் தடங்கல்கள் என்று நாம் என்னும் பல விசயங்கள் நமது நன்மைக்காக நடப்பவையே. ஒரு வார்த்தை சொன்னால் போதும், இந்த உலகமே உங்கள் காலடிக்குள் அடக்கிவிடும். இந்த பிரபஞ்சத்தின் உரிமையாளன் உங்களின் அற்ப ஆசைகளை நிறைவேற்ற மாட்டானா? அனைத்தும் உங்களின் சொந்த முயற்சியால் நடக்க வேண்டும் என்று எண்ணாமல், உங்களைப் பற்றிருப்பவனிடம், பற்றுடன், பணிவுடன் இறைஞ்சுங்கள், உங்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அனைவருக்கும் இறைவன் போதுமானவன்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field