வாழ்க்கை

வாசிக்கும் பழக்கம்

girl reading book

வாசிக்கும் பழக்கம்

ஒரு நல்ல புத்தகம் ஒரு சிறந்த ஆசிரியருக்குச் சமமானது, ஒரு சிறந்த குருவுக்குச் சமமானது. மனிதர்கள் சிறப்பானதொரு வாழ்க்கையை வாழ்வதற்கு நூல்கள் இன்றியமையாதவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வாசிப்புப் பழக்கம் இல்லாத மனிதர்கள் இந்த பூமியில் வசிக்கிறார்கள், ஆனால் அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வாழ்க்கையை முழுமையாக வாழ்வதில்லை வளர்வதுமில்லை.

சட்டையில் விழும் கிழிசல்களை மறைக்க நூல் உதவுவதைப் போன்று மனிதர்களின் அறியாமையை மறைத்து வாழ்க்கைக்கு வழிகாட்டுவதால் இதற்கு நூல் என்று பெயர் வந்திருக்கலாம். காய்ந்த ஓலைச் சுவடிகளை ஒன்றாக நூலைக் கொண்டு கட்டுவதாலும் புத்தகத்திற்கு நூல் என்று பெயர் வந்திருக்கலாம்.

இந்த உலகில் பல்லாயிரக்கணக்கான கலைகளும் வித்தைகளும் படிப்புகளும் உள்ளன அனைத்தையும் அனைவராலும் கற்றுக்கொள்ள முடியுமா? ஒரு வாழ்க்கை போதுமா? ஒரு சில குறிப்பிட்ட கலைகளை மட்டுமே கற்றுக்கொள்ள விரும்பினாலும் அவர் பல இடங்களுக்குச் சென்று, பெரும் பொருள் செலவழித்து, பல வருடங்கள் உழைப்புக்குப் பின்னர்தான் கற்றுக்கொள்ள முடியும். ஆனால் வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள் எந்தக் கலையையும் படிப்பையும் விரும்பும் நேரத்தில், அவர் விரும்பும் இடத்தில் இருந்து கொண்டே கற்றுக்கொள்ள முடியும்.

இசை பயின்றவருக்கு இசை மட்டுமே தெரியும், கட்டிடக்கலை பயின்றவருக்கு கட்டிடக்கலை மட்டுமே தெரியும், கணினி கற்றோருக்கு கணினி மட்டுமே தெரியும், ஒருவர் எந்தக் கலையை பயில்கிறாரோ அந்தக் கலை மட்டுமே அவருக்குத் தெரிந்திருக்கும் ஆனால் வாசிப்புப் பழக்கம் உள்ளவர் எந்தக் கலையை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள முடியும். அதுவும் அவர் விரும்பும் நேரத்தில், அவர் விரும்பும் இடத்தில் இருந்து கொண்டே தெரிந்து கொள்ள முடியும்.

திருவள்ளுவர், திருமூலர், மாணிக்கவாசகர், வள்ளலார், ஏசுநாதர், நபிகள் நாயகம், புத்தர் போன்ற மிக உயர்ந்த மனிதர்களைக் காண்பதும், அவர்களுடன் பழக்குவதும், உரையாடுவதும் இயலாத காரியம். ஆனால் அவர்கள் விட்டுச்சென்ற எழுத்துக்களின் மூலமாக அவர்களின் அறிமுகம் நமக்குக் கிடைக்கிறது, அவர்களுடன் பழகுகிறோம், அவர்களுடன் உரையாடுகிறோம்.

மேலே குறிப்பிட்ட சில ஞானிகளைப் போன்று காலம் கடந்தும், நமக்கு முந்தைய ஞானிகளின் அனுபவங்களும், ஞானங்களும் புத்தகங்களாகக் கிடைப்பதனால்; கிடைப்பதற்கரிதான ஞானங்களைக் கூட நமது சமகாலத்தில் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

வாசிக்கும் பழக்கம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய மிக முக்கியமான பழக்கமாகும். நீங்கள் வாசிக்கத் தொடங்குங்கள், உங்கள் பிள்ளைகளையும் வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்.

Reiki Master, Healer, Acupuncturist, Writer, Thinker, Speaker, Author.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X