வாழ்க்கையில் இன்பமும் துன்பமும். மனித வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்ததுதான். உலக வாழ்க்கை என்பது உயிர்களுக்கு பயிற்சியாகவும் பாடமாகவும் இருப்பதினால் புழு பூச்சி முதல் மனிதர்கள் வரையில் எல்லா உயிரினங்களுக்கும் இன்ப துன்ப அனுபவங்கள் நிச்சயமாக இருக்கும்.
வாழ்நாளில் இன்ப துன்பங்களை அனுபவம் செய்யாத மனிதர்கள் என்று இந்த இவ்வுலகில் யாரும் இருந்ததில்லை இனி இருக்கவும் மாட்டார்கள்.
மண்ணும் கழிவும் கலந்து பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் தங்கம் நெருப்பால் சுடப்பட்டு, சுத்தியால் தட்டப்பட்டு நகையாக வடிவம் கொள்கிறது. அதைப்போல் மனிதர்களும் பல்வேறு இன்ப துன்பங்களுக்கு ஆளாகி அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு மனப் பக்குவம் அடைகிறார்கள்.
எந்த ஒரு ஏற்ற தாழ்வும் இல்லாத மனித வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரையில் தினமும் எந்த மாற்றமும் இல்லாத ஒரே வகையான உணவு, செயல்கள், அனுபவம், வாழ்க்கை எப்படி இருக்கும்?
எந்த வளைவும் நெளிவும் தடங்கலும் இல்லாத பாதை பார்ப்பதற்கு நன்றாக இருக்குமே ஒழிய பயணிக்க நன்றாக இருக்காது. பல கிலோமீட்டர்களுக்கு நேராகச் செல்லும் விரைவுச் சாலையில் பயணிக்கும் போது வேகமாகச் செல்லலாம் என்பது உண்மை ஆனால் சற்று நேரத்திற்கெல்லாம் அந்தப் பயணம் கசந்துவிடும். வளைவும் நெளிவும் உள்ள பாதைகளில் பயணம் செய்தால்தான், காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கும் அந்த பயணமும் சுவாரசியமானதாக இருக்கும்.
வெயிலும் உஷ்ணமும் நிறைந்த இடத்தில் வாழ்ந்தவர்களுக்குத் தான் ஊட்டி குன்னூர் போன்ற குளுமையான இடங்களுக்குச் செல்லும்போது அந்த பயணம் சுவாரசியமானதாக இருக்கும். குளுமையான இடத்திலேயே வசிப்பவர்களுக்கு அதன் மேன்மையும் சிறப்பும் தெரியாது. வறண்ட பாலைவனப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மட்டுமே குறிஞ்சி மற்றும் முல்லை நிலங்கள் உயர்வானதாகத் தெரியும்.
வாழ்க்கையில் கஷ்டம், நஷ்டம், துன்பம், துயரம் போன்றவற்றை அனுபவம் செய்தவர்களுக்கு மட்டுமே தன் வாழ்க்கையில் வரும் இன்பம் மற்றும் மகிழ்ச்சியான காலகட்டங்களை முழுமையாக அனுபவிக்க முடியும்.
முழு இன்பமாக இருந்தாலும் வாழ்க்கை கசந்துவிடும், தொடர்ச்சியாக துன்பங்களை அனுபவம் செய்தாலும் வாழ்க்கை கசந்துவிடும் அதனால் தான் இரவும் பகலும், மழையும் வெயிலும், மாறி மாறி வருவதைப் போன்று மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகின்றன.
இன்பமாக இருந்தாலும் துன்பமாக இருந்தாலும் எதுவுமே நிரந்தரம் இல்லாததால் கவலை கொள்வதற்கோ மகிழ்ச்சி கொள்வதற்கு வாழ்க்கையில் எதுவும் இல்லை. அனைத்துமே மாற்றத்துக்கு உரியவை.