உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி. ஓரறிவு முதலாக ஐந்தறிவு வரையிலான உயிரினங்களின் வளர்ச்சி உடல் சார்ந்ததாக, மெய், வாய், மூக்கு, கண், செவி ஆகியவற்றின் வளர்ச்சிகளாக இருக்கின்றன. பரிணாம வளர்ச்சியில் உணர்தல், சுவைத்தல், நுகர்தல், பார்த்தல், மற்றும் கேட்டல் என ஐந்து குணங்கள் வளர்கின்றன. அவற்றின் வளர்ச்சியும் சிறு பகுதி என்ற நிலையில் இருந்து படிப்படியாக வளர்ச்சி அடைந்து, ஒவ்வொரு வகையான உயிரினத்துக்கும் சில பொறிகள் கலந்தும், தன்மையில் மாறுபட்டும் வளர்கின்றன.
உதாரணத்துக்கு, தாவரங்களுக்கு மெய் என்ற ஒரு பொறி மட்டுமே இருக்கிறது. சிப்பி, நத்தை, மற்றும் புழு வகைகளுக்கு மெய் மற்றும் வாய் என்ற இரு பொறிகள் மட்டுமே இருக்கின்றன. சில பூச்சி இனங்களுக்கு மெய், வாய், மற்றும் மூக்கு என்ற மூன்று பொறிகள் மட்டுமே இருக்கின்றன. சில பூச்சி, வண்டு மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு மெய், வாய், மூக்கு, மற்றும் கண், என நான்கு வகையான பொறிகள் இருக்கின்றன. நான்கு கால் விலங்குகள், பறவைகள் மற்றும் சில கடல் வாழ் உயிரினங்களுக்கு மெய், வாய், மூக்கு, கண், மற்றும் செவி ஆகிய ஐந்து வகையான பொறிகளும் இருக்கின்றன.
மனிதர்களுக்கு மட்டுமே ஐம்பொறிகளுடன் சேர்த்து ஆறாவது பொறியாக அல்லது உறுப்பாக மனம் வழங்கப்பட்டிருக்கிறது. பொறிகளின் எண்ணிக்கை மாறுபட்டு இருந்தாலும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் உலகில் வாழ்வதற்குத் தேவையான புத்தி வழங்கப்பட்டிருக்கிறது.
ஓரறிவு முதலான உயிரினங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப, அதன் புத்தியும், புத்தியைப் பயன்படுத்தும் ஆற்றலும், வளர்கின்றன. பெரும்பாலும் அறிவையும், புத்தியையும், அவற்றின் அனுபவங்களையும், விலங்குகள் உணவுத் தேவைக்காகவும், தற்காப்புக்காகவும், உடலின் இயக்கங்களுக்காகவும் மட்டுமே பயன்படுத்துகின்றன. உடலின் பாதுகாப்பு மற்றும் உடலின் தேவையை மீறிய சிந்தனைகள் விலங்குகளுக்கு எழுவதில்லை.
புத்தியைப் பயன்படுத்தும் ஆற்றலின் முழுமை பெற்ற நிலையைத் தான் ஆறாவது அறிவு என்றும், பகுத்தறிவு என்றும், அழைக்கிறோம். விலங்குகளுக்கு மனம் வளர தொடங்கியிருந்தாலும் அவற்றின் வளர்ச்சி முழுமைப் பெறாமல் இருப்பதனாலும், அவற்றின் மனம் முழு ஆற்றலுடன் இயங்காமல் இருப்பதனாலும் விலங்குகளுக்கு ஆறாவது அறிவான மனம் இல்லை என்று கூறுகிறோம்.
Leave feedback about this