உயிர்க் கொலையும் இந்த உலகில் தர்மம் தான். விலங்குகளில் நல்ல விலங்கு எது? கெட்ட விலங்கு எது? நான் பல வீடியோக்களில் பார்த்திருக்கிறேன் மலைப்பாம்பு ஆட்டை விழுங்கி விட்டது, நாயை விழுங்கி விட்டது, வளர்ப்புப் பிராணியை விழுங்கி விட்டது என்று அதை மனிதர்கள் அடித்துக் கொலை செய்வார்கள். சிலவேளைகளில் மலைப்பாம்பு ஆட்டை விழுங்கி விட்டால் அந்த மலைப்பாம்பைக் கொன்று அதன் வயிற்றைக் கிழித்து அது விழுங்கிய ஆட்டை வெளியே எடுப்பார்கள். மனிதர்கள் “ஆடு மலைப்பாம்பின் உணவு தானே” என்று சற்றும் சிந்திப்பதில்லை.
மலைப்பாம்பு ஆட்டை விழுங்கியதில் ஒரு தர்மம் இருக்கிறது சிறிய விலங்குகளை மலைப்பாம்பின் உணவாக இயற்கை அமைத்திருக்கிறது. அந்த விலங்குகளை மலைப்பாம்பு கொன்று தின்பதில் எந்தத் தவறும் இல்லை. இயற்கையின் அமைப்பைப் புரிந்து கொள்ளாத மனிதர்கள், மலைப்பாம்பைக் கொல்வது ஒரு முட்டாள்தனமான பாவச் செயல் ஆகும்.
சிங்கம், புலி, கரடி போன்ற விலங்குகளை கொடிய விலங்குகள் என்று மனிதர்கள் அழைப்பார்கள். கொடிய விலங்குகள் என்று அழைக்கும் அளவுக்கு அந்த விலங்குகள் என்ன தவறுகள் செய்தன? ஆசைக்காக கொலைகள் செய்தனவா? பணத்துக்காக மற்றவரை ஏமாற்றியதா? அப்படி ஒன்றுமில்லை. இயற்கையின் சட்டத்திற்கு உட்பட்டு தன் பசிக்காக விலங்குகளை வேட்டையாடுகின்றன. இயற்கையைப் புரிந்துக் கொள்ளாத மனிதர்கள் மாமிசம் உண்ணும் விலங்குகளை
கூலிக்குக் கொலை செய்யும் கொலைகாரர்களைப் போன்று பார்க்கிறார்கள்.
இந்த உலகில் மனிதர்களைத் தவிர வேறு எந்த உயிரினமும் தன் சுயலாபத்திற்காக மற்ற உயிர்களைக் கொள்வதில்லை. மாமிசம் உணவாக வழங்கப்பட்ட உயிரினங்கள் உணவுக்காக வேட்டையாடுவது தர்மம்தான்.