மனம்

உறவுகளுக்கு இடையிலான மனத் தொடர்புகள்

உறவுகளுக்கு இடையிலான மனத் தொடர்புகள். பிள்ளையின் தாயானவள் வீட்டின் வாசலில் அண்டை வீட்டாருடன் பேசிக் கொண்டிருந்தாலும், உறங்கிக் கொண்டிருந்தாலும், தொட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தை விழித்துக் கொண்டால் அதை அந்த தாயால் உணர்ந்து கொள்ள முடிகிறது. வீட்டில் சமைத்துக் கொண்டிருக்கும் தாய், பல வேளைகளில் மூழ்கி இருந்தாலும் பிள்ளையின் பள்ளி வாகனம் வீட்டின் வாசலை நெருங்கும் போதே அதை அவரால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

கணவன் சிக்கலில், அல்லது கவலையில் இருக்கும் போது, மனைவியால் அதனை உணர்ந்துகொள்ள முடிகிறது. மனைவி ஒரு குழப்பத்தில் இருக்கும் போது, கணவனால் அதனை உணர்ந்துகொள்ள முடிகிறது. பெற்றோர்களின் பிரச்சனைகளை பிள்ளைகள் உணர்ந்துக் கொள்கிறார்கள். பிள்ளைகளின் பிரச்சனைகளை பெற்றோர்கள் உணர்ந்துக் கொள்கிறார்கள். குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலும் மற்ற குடும்ப உறுப்பினர்களின் மனநிலையை எளிதில் புரிந்துக் கொள்கிறார்கள்.

இது ஒரு வகையான மனோசக்தி. தாத்தா, பாட்டி, சொந்தங்கள், பந்தங்கள், அன்பர்கள், நண்பர்கள், என நம்மைச் சுற்றியிருக்கும் அத்தனை மனிதர்களுடனும் சூட்சமமான நிலையில் நாம் தொடர்பில் இருக்கிறோம். மனம் என்பது உடலுக்கு வெளியிலும் பரவக்கூடியது, வெளியிலிருந்தும் தகவல்களை கிரகிக்கக் கூடியது. மனம் வீடு முழுவதும் பரவி இருப்பதனால் மற்ற குடும்ப உறுப்பினர்களின் மனநிலையை நம்மாலும், நம் மனநிலையை மற்றவர்களாலும் வாய் திறந்து சொல்லாமலேயே புரிந்துக்கொள்ள முடிகிறது.

இன்றைய கால கட்டத்தில் குடும்ப உறவுகளுக்குள் அன்பும் நெருக்கமும் குறைந்து வருவதனால். சொல்லாமலேயே மனநிலையை உணர்ந்துக் கொள்ளும் இயல்பை பல குடும்ப உறுப்பினர்கள் இழந்து வருகிறார்கள். சில காலங்களுக்கு முன்பு வரையில் கடல் கடந்து வாழும் பிள்ளைக்கு உடல் நலமில்லை என்றாலும் இந்தியாவில் வாழும் தாயால் அதனை உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆனால் இன்று சில தாய்மார்களுக்கு உடன் வாழும் பிள்ளைகளின் மனதைக் கூட புரிந்துக்கொள்ள இயலவில்லை. அந்த அளவுக்கு உறவுகளுக்குள் விரிசல்கள் உண்டாகிவிட்டன.

இன்றைய மனிதர்கள், நான், எனது, என் வாழ்க்கை, என் குடும்பம், என்று தங்களின் வாழ்க்கையை சுருக்கிக் கொண்டிருப்பதால் மனிதர்களுக்கு இடையிலான நெருக்கமும் உறவும் குறைந்து விட்டன. குடும்ப உறவுகளுடன் அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும் போது மனோசக்தியும் மனதாலே உணர்ந்துக் கொள்ளும் தன்மையும் அதிகரிக்கும். இல்லையேல் காலப் போக்கில் இந்த மனோசக்தி மனிதர்களால் பயன்படுத்த முடியாமல் அறவே அழிந்து போகும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X