ஆரோக்கியம்

உண்ணா நோன்பும் ஆரோக்கியமும்

உண்ணா நோன்பும் ஆரோக்கியமும். உண்ணா நோன்பு என்பது பல்வேறு இனங்களில், மதங்களில் மற்றும் கலாச்சாரங்களில் பின்பற்றப்பட்டு வரும் ஒரு மரபாகும். நமக்கு வெளிப்படையாக தெரிந்து இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் உண்ணா நோன்பு இருப்பார்கள். சைவர்களும் வைணவர்களும் சில குறிப்பிட்ட நாட்களில் உண்ணா நோன்பை கடைப்பிடிப்பார்கள். ஒரு சிலர் வேண்டுதல் நிறைவேற உண்ணா நோன்பு இருப்பார்கள்.

உண்ணா நோம்பின் விரதங்கள் பல்வேறு வழிமுறைகளில் கடைப்பிடிக்கபட்டு வருகின்றன. ஒரு சிலர் நாள் முழுவதும் முழுமையாக உண்ணாமல் இருப்பார்கள், சிலர் பால் மற்றும் பழங்களை மட்டும் உண்பார்கள், சிலர் தண்ணீர் மட்டும் அருந்துவார்கள், சிலர் மாலை வரையில் நோன்பு இருப்பார்கள். நோன்பிருக்கும் பழக்கம் கலாச்சாரத்துக்கு ஏற்ப மாறுபடுகிறது.

விரதம் இருப்பதன் நோக்கம் என்ன?

வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்குத் தெரியும், அவர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகள் நோய்வாய்ப்பட்டால் அல்லது விபத்துகளோ காயங்களோ ஏற்பட்டால் அவை முழுமையாக குணமாகும் வரையில் உணவை உட்கொள்ள மாட்டா. என்னதான் சுவையான, அவற்றுக்கு விருப்பமான உணவை வைத்தாலும், உடல் நலம் முழுமையாக தேறும் வரையில் அவை உணவை உட்கொள்ள மாட்டா. வீட்டில் வளர்க்கும் விலங்குகள் மட்டுமின்றி, காட்டில் வளரும் விலங்குகள், பறவைகள், என எந்த உயிரினமும் உடல்நிலை சரியில்லை என்றால் முழுமையாக உணவை ஒதுக்கி விடுகின்றன.

நமக்கும் கூட உடல் நலம் சரியில்லாத நேரங்களில் பசி உண்டாக மாட்ட, சில வேளைகளில் வயிறு கனமாகவும், வாய்க் கசப்பாகவும் இருக்கும். இவையெல்லாம் உடலில் ஏதோ குறைபாடு உள்ளது, அதனைச் சரிசெய்யும் வேளையில் உடல் ஈடுபட்டுள்ளது என்று பொருளாகும். வாய் கசப்பு, பசியின்மை, வயிறு கனத்தல் வயிறு உப்புசம், குமட்டல் உணர்வு, வாந்தி வரும் உணர்வு அனைத்தும் உணவை உட்கொள்ளாதே என்று உடல் நமக்கு இடும் கட்டளைகளாகும்.

இந்த கட்டளைகளை அலட்சியம் செய்யும் மனிதர்கள், பல வேளைகளில் கொடிய நோய்களுக்கு ஆளாகிறார்கள். நோய்கள் உருவான பிறகு குணப்படுத்துவதை விடவும், நோய்கள் அண்ட விடாமல் இருப்பதற்கான ஒரு முயற்சிதான் உண்ணா நோன்பு இருத்தல்.

மனதுக்கான பயிற்சி

சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும், ஆன்மீகப் பயிற்சிகளில் ஈடுபடுபவர்களும், உணவைத் தேர்ந்தெடுத்து உண்பதும், மிகவும் குறைவாக உணவை உட்கொள்வதும் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆன்மீகத்தில் ஈடுபடுபவர்கள் உணவைக் குறைப்பதற்குக் காரணம், வயிறு காலியாக இருந்தால் தான் உடல் நாம் சொல்வதைக் கேட்கும், அடுத்தது பசியோடு இருக்கும் போதுதான் மனதை நம் தேவைக்குப் பழக்க முடியும்.

உடலின் ஆற்றலை அதிகரிக்கவும், கழிவுகளை வெளியேற்றவும், நோய்களை குணப்படுத்தவும், மற்றும் மனதை கட்டுப்படுத்தி நமது நோக்கத்துக்கு ஏற்ப பழக்கவுமே நோன்பு அல்லது விரதம் என்ற ஒரு பழக்கம் பாரம்பரியமிக்க இனங்களில் காலாகாலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *