வாழ்க்கை

உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள்

உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள். தற்போது நம்மிடம் இருக்கும் அடையாளம், நமது குணாதிசயம், நமது ஆசைகள், நமது எண்ணங்கள், நமது சிந்தனைகள், நமது நம்பிக்கைகள் அனைத்தும் பெரும்பாலும் நமக்குச் சொந்தமானவை அல்ல. அவையனைத்தும் நாம் வெளியிலிருந்து பெற்றுக் கொண்டவை அல்லது நம்மீது திணிக்கப்பட்டவை.

இன்று நமது அடையாளமாக நாம் கருதிக் கொண்டிருக்கும் பெரும்பாலான விசயங்கள், நமக்கு சுய சிந்தனையும் அறிவும் உண்டாகும் முன்பாகவே நம்மீது திணிக்கப்பட்டவை. நமது பெற்றோர்களும், நாம் வாழும் சமுதாயமும் இந்த வாழ்க்கையைப் பற்றிய சில கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் நம்மீது திணித்துள்ளன. அந்த திணிப்புகளின் அடிப்படையில் தான் நாம் பெரும்பாலான நேரங்களில் இந்த வாழ்க்கையைப் பார்க்கிறோம், வாழ்கிறோம், அனுபவிக்கின்றோம்.

ஒரே குடும்பத்தில், ஒரே இனத்தில், ஒரே சமுதாயத்தில், பிறந்திருந்தாலும் ஒவ்வொரு மனிதனின் பிறப்பின் நோக்கமும் வெவ்வேறாக இருக்கும். பிறப்பின் நோக்கத்துக்கு ஏற்றவாறுதான் உடலும் மனமும் இயங்கும். அதனால் சமுதாயம் சொல்லும் வாழ்க்கை வேறு, மனம் விரும்பும் வாழ்க்கை வேறு என்ற போராட்டம் பெரும்பாலும் அனைவருக்கும் இருக்கும்.

சுருக்கமாகச் சொல்வதானால் இந்த பூமியில் அமைதியாக, ஆனந்தமாக வாழ்வதற்கு வந்த நாம், ஏற்கனவே இங்கு வாழ்ந்தவர்கள் அல்லது வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையை வாழ்கிறோம். அவர்கள் எவற்றையெல்லாம் இன்பம், மகிழ்ச்சி, வாழ்க்கை, என்று நம்பினார்களோ அவற்றை நாடும்படி நம்மைத் தூண்டுகிறார்கள். அவர்கள் எவற்றையெல்லாம் கண்டு அஞ்சினார்களோ அவற்றையெல்லாம் ஒதுக்கும்படி நம்மைத் தூண்டுகிறார்கள். அவர்கள் எவற்றையெல்லாம் இந்த வாழ்க்கையில் அடைய முடியவில்லையோ அவற்றையெல்லாம் நம்மை அடையும்படி தூண்டுகிறார்கள்.

பெற்றோர்கள், குடும்பம், சமுதாயம், என மற்றவர்கள் நம்மீது திணித்த மதம், இனம், சாதி, கல்வி, வேலை, வாழ்க்கைமுறை போன்றவற்றை ஏற்றுக்கொண்டு அவற்றுடன் இணைந்து வாழப் போராடுகிறோம். அந்த போராட்டத்தில் பெரும்பாலும் தோற்றுவிடுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X