உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ்கிறீர்களா? வாழ்வதற்காக இந்த பூமிக்கு வரும் பெரும்பாலான மனிதர்கள், தங்களின் வாழ்க்கையை வாழ்வதில்லை என்பது எனது அபிப்பிராயம். ஒரு உணவகத்தில் உணவை உட்கொள்ள அமர்ந்த ஒருவர், தனக்கு வழங்கப்பட்ட உணவை உட்கொள்ளாமல் பக்கத்து மேசையில் இருப்பவர் உண்பதை வேடிக்கை பார்ப்பதைப் போன்று, பிற மனிதர்களின் வாழ்க்கையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டும், மற்றவர்களைப் போன்று வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டும் பெரும்பாலானோர் தங்களின் வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறார்கள்.
இந்த பூமி, ஆன்மாக்கள் தன்னை உணர்ந்து கொள்வதற்கான பயிற்சிக் களம். உலக வாழ்க்கை என்பது, இன்பம், துன்பம், அன்பு, கருணை, உணர்வுகள், உறவுகள், என்று ஓரறிவு முதல் முழுமை பெற்ற ஆறறிவு வரையில் அத்தனை உயிரினங்களும் பல்வகையான அனுபவங்களையும் படிப்பினைகளையும் பெற்றுக்கொள்ளும் கல்விக்கூடமாகும்.
மனிதர்கள், தங்களின் தினசரி வாழ்க்கை அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, விலங்கு நிலையில் இருந்து முழுமையாக விடுபட வேண்டும். தனது மனிதத் தன்மையை உணர்ந்து, அனுபவம் செய்து, முழுமை பெற்று, பின் கடவுள் நிலையை எய்துவது தான் மனித பிறப்பின் நோக்கமாகும். இந்த கருத்தை பல்வேறு மொழிகளில், பல்வேறு வடிவங்களில், பல ஞானிகள் விளக்கிச் சென்றுள்ளனர். பலர் நூல்களாகவும், பயிற்சிகளாகவும், சிலர் சமயங்களாகவும் வகுத்துத் தந்துள்ளனர். யார் எவ்வாறு விளக்கினாலும் ஒரு மனிதனின் தனிப்பட்ட அனுபவத்தில் இல்லாத ஒன்றை அவன் விளங்கிக் கொள்வது கடினமல்லவா?
பெரும்பான்மையான மனிதர்களுக்கு வாழ்க்கை என்றால் என்ன? என்ற கேள்வி எழுவதற்குள் வயது நாற்பதைத் தாண்டிவிடுகிறது. எதற்கு இந்த வாழ்க்கை? வாழ்க்கை எங்கே தொடங்கியது? எவ்வாறு எங்கே எதனால் முடிவடைகிறது? மனிதர்களின் மரணத்திற்குப் பின்பாக என்ன நடக்கவிருக்கிறது? மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை என்று ஏதாவது உள்ளதா? நம்மை யாராவது படைத்தார்களா? நமது செயல்களைக் கண்காணிக்கும், கணக்கு வைத்துக் கொள்ளும் சக்தி என்று ஏதாவது உள்ளதா? என்பதை மனிதன் சிந்திக்கத் தொடங்கும் போது முதுமை தொடங்கி, பதிலை உணர்வதற்குள் மரணம் அழைத்துக் கொள்கிறது. இவ்வாறு பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கை, பிறப்பின் நோக்கத்தை அறியாமலும், பூர்த்தி செய்யாமலும் முடிவடைகிறது.
மனம் போன போக்கில் வாழ்ந்து மரணிப்பது என்றால் நான்கு அறிவே போதுமானது. இன்ப துன்பங்களை அனுபவம் செய்வதுதான் வாழ்க்கை என்றால் ஐந்து அறிவே போதுமானது. மற்ற எந்த உயிரினங்களுக்கும் வழங்காத ஆறாவது அறிவை மனிதர்களுக்கு இறைவன் வழங்கியிருக்கிறான் என்றால்; ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையில் உள்ள பிற உயிரினங்கள் எவையும் செய்யாத ஒரு செயலை மனிதர்கள் செய்ய வேண்டும் என்று இறைவன் எதிர்பார்க்கிறான்.
அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவும், மனிதப் பிறப்பின் நோக்கத்தைத் தேடிப் பயணிப்பவர்களுக்கு வழிகாட்டவும், மனிதர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக ஆறாவதாக ஒரு அறிவை வழங்கியிருக்கிறான். ஆறாவது அறிவை பயன்படுத்தி இந்த வாழ்க்கையை ஆராய்ந்தால் மட்டுமே வாழ்க்கையையும், பிறப்பின் நோக்கத்தையும் மனிதனால் புரிந்துகொள்ள முடியும்.
Leave feedback about this