திருவிழாக் கூட்டம்
ஊரே கூடியிருந்தது
நாமோ திருவிழாவில்
ஒரு தீவானோம்
நம்மைச் சுற்றியும்
ஆயிரம் தலைகள்
ஆயிரம் குரல்கள்
ஆயிரம் உறவுகள்
பேச ஆயிரம் இருந்தும்
வார்த்தைப் பஞ்சத்தில்
நீயும் நானும்
கூட்டத்தின் நடுவே
கைகோர்த்து நடக்கத்
துணிவில்லை
விரல்கள் மட்டும்
விருந்தாளியாய்
பட்டும் படாமல்
பேசிக் கொண்டன
உதடுகள் மௌனம் காத்தன
கண்கள் நிலம் அளந்தன
வெட்கமும் புன்னகையும்
மாறி மாறி நடித்துக்கொண்டன
ஆயிரம் வசனங்களை – உன்
கண்கள் மட்டுமே பேசின
உன் உதடுகளோ
மௌனவிரதம் அனுசரித்தன
பிரிந்தோம் கண்களால்
மட்டும் பயணம் சொல்லி
வருடங்கள் பல ஆகியும்
நேற்றைய அனுபவமாய்
என் மனதில்
உன் மௌனவிரதம்
இன்னும் முடியவில்லையோ
அழையா விருந்தாளியாக
உன் முடிவுக்காக
திண்ணையில்
காத்திருக்கிறேன்
நான்…!
Leave feedback about this