உலக வாழ்க்கை எந்நேரமும் மாறக்கூடியது
வாழ்க்கை

உலக வாழ்க்கை எந்நேரமும் மாறக்கூடியது

உலக வாழ்க்கை எந்நேரமும் மாறக்கூடியது. தன் வாழ்க்கையை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையாகவும் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான மனிதர்கள் அவ்வாறு வாழ்வதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அவர்கள் தங்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும், வசதியாகவும், வாழ்வதற்கும் முதல் தடையாக இருப்பது அவர்களின் மனதினுள் பதிந்துவிட்ட முன்முடிவுகளே.

பெற்றோர்களின் சில நடவடிக்கைகளை வைத்து என் பெற்றோர்கள் இப்படிப்பட்டவர்கள் என்று பிள்ளைகளின் மனதினுள் பதிவு உருவாகிவிடுகிறது. பிள்ளைகளின் சில செயல்களை வைத்து என் பிள்ளைகள் இவ்வாறானவர்கள் என்று பெற்றோர்களின் மனதில் பதிவு உருவாகிவிடுகிறது. கணவன் மனைவியிடத்திலும், மனைவி கணவனிடத்திலும், காணும் சில குறை நிறைகளை வைத்து அவர் அப்படித்தான் என்ற பதிவு உருவாகிவிடுகிறது. சிறு வயது முதலே சில உறவினர்களின் நடவடிக்கைகளையும் செயல்களையும் வைத்து உறவினர்கள் அனைவரும் இவ்வாறானவர்கள் என்று மனதினுள் பதிவு உருவாகிவிடுகிறது

பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சியிலும், திரைப்படங்களிலும், காட்டப்படும் செய்திகளை வைத்து இந்த சமுதாயம் இப்படிப் பட்டதுதான் என்ற பதிவு மனதினுள் உருவாகிவிடுகிறது. இவ்வாறு சிறுவயது முதலாக மனதுக்குள் உருவாகும் சிறு சிறு பதிவுகளே பின் நாட்களில் பலரது வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் பெரும் தடையாக அமைகிறது.

சொந்தங்களுடனும், உறவுகளுடனும், நட்புகளுடனும், பழகுவதற்கு முன்பாக மனதுக்குள் முன்முடிவை வைத்துக்கொண்டு; அந்த பதிவின் கண்ணோட்டத்திலிருந்து அவர்களைப் பார்க்க பழகிக் கொண்டோம். அதைப்போல் ஒரு செயல்களை அல்லது காரியத்தைத் தொடங்குவதற்கு முன்பாகவும் மனதினுள் இருக்கும் பதிவுகளை வைத்து அந்த செயல் நடக்கும் – நடக்காது, வெற்றி பெரும் – தோல்வியடையும், என்று ஏதாவது ஒரு முன் முடிவை உருவாக்கிக் கொள்கிறோம்.

நேற்று நல்லவராக இருந்த ஒருவர் இன்று தீயவராக மாறி இருக்கலாம்; நேற்று தீயவராக இருந்த ஒருவர் இன்று நல்லவராக மாறி இருக்கலாம். நேற்றைய உறவு இன்று பகையாகலாம், இன்றைய பகை நாளை நட்பாகலாம். நேற்று போற்றிய உலகம் இன்று தூற்றலாம், நாளை மீண்டும் போற்றலாம். நேற்று உங்களால் இயலாத ஒரு காரியம் இன்று உங்களுக்கு இயன்றதாக இருக்கலாம். நேற்று தோல்வியைத் தந்த அதே முயற்சி இன்று வெற்றியைத் தரலாம்.

இந்த வாழ்க்கை அனுதினமும் மாறிக்கொண்டிருக்கிறது. நேற்று பார்த்த உலகம் இன்று இல்லை, அது கடந்து சென்றுவிட்டது. நேற்று பார்த்த மனிதர்கள் இன்று இல்லை, அவர்களும் கடந்து சென்றுவிட்டார்கள். உங்கள் வாழ்க்கையில் எதையுமே நீங்கள் இரண்டு முறை சந்திக்க முடியாது. வெற்றியோ தோல்வியோ, இன்பமோ, துன்பமோ, நேற்று நீங்கள் அனுபவித்தவை வேறு, இன்று அனுபவிப்பவை வேறு, நாளை அனுபவிக்கப் போகின்றவை வேறு.

ஜப்பானிய ஜென் தத்துவம் சொல்கிறது “ஒரே ஆற்றில் இரண்டுமுறை யாராலும் குளிக்க முடியாது” என்று. ஆறு ஓடிக்கொண்டே இருப்பதனால் நீங்கள் வலது காலை நனைக்கும் போது இருந்த ஆறு இடது காலை நனைக்கும் போது இருக்காது, அது கடந்து சென்றிருக்கும். அதைப் போன்றதுதான் வாழ்க்கை, நேற்று என்று நீங்கள் நினைக்கும் அனைத்துமே கடந்து சென்றுவிட்டவை, அவை மீண்டும் திரும்பமாட்டா. அதனால் கடந்த காலத்தை வைத்தும் முன் முடிவுகளை வைத்தும் உங்கள் நிகழ்காலத்தை இடை போடாதீர்கள்.

ஒரு காரியத்தைத் தொடங்குவதற்கு முன்பும், ஒரு செயலைச் செய்யும் போதும், மனிதர்களுடன் பழகும் போதும், நேற்றைய அனுபவங்களைக் கொண்டு இடை போடாதீர்கள். மனதில் இருக்கும் கடந்த கால நினைவுகளைக் கொண்டு முன்முடிவுகளுடன் இருப்பதுதான், பல உறவுகளும் பல முயற்சிகளும் தோல்வி அடைவதற்குக் காரணமாக இருக்கிறது. நேற்று என்பது வெறும் அனுபவம் மட்டுமே, அது இன்றைய வாழ்க்கையையோ, எதிர்கால வாழ்க்கையையோ நிர்ணயிக்கக்கூடாது.

நாம் கண் விழிக்கும் ஒவ்வொரு நாளும் புதிதாகப் பிறக்கிறோம். ஒவ்வொரு நாளும் புதியது, ஒவ்வொரு நிமிடமும் புதியது. ஒவ்வொரு நாளையும் புதிதாகத் தொடங்குங்கள், இனி ஒவ்வொரு நாளும் உங்களுக்கு இன்பம் நிறைந்த மகிழ்ச்சியான நாளாக அமையும்.

Leave feedback about this

  • Rating
X