உலக நாடுகளில் சாதிகள்
இந்தியாவையும் ஜாதி கட்டமைப்பையும் பிரிக்க முடியாத அளவுக்கு சாதியின் ஆதிக்கம் மிக அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளில் இன மற்றும் சாதி பிரிவுகள் இருக்கின்றன. பல சமூகங்கள் மற்றும் மதங்களில் கூட சாதிப் பிரிவினைகள் இருக்கின்றன. இந்தியாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் உள்ள வேற்றுமை என்னவென்றால், பெரும்பாலான நாடுகளில் இனத்தையும் மொழியையும் அடிப்படையாகக் கொண்டு மட்டுமே பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன, ஒரு சமூகத்தை உயர்ந்ததாகவும் தம் கூடவே வாழும் மற்றொரு சமூகத்தைத் தாழ்ந்ததாகவும் பார்க்கும் பண்பு அங்கு பெரும்பாலும் கிடையாது.
பெரும்பாலான நாடுகளில் ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறை, தொழில், ஒழுக்கம், பண்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தான் இன பிரிவாக அல்லது சாதி பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன. உதாரணத்துக்குச் சொல்கிறேன், மீன் பிடித்து வாழ்பவர்கள் ஒரு இனம், விவசாயம் செய்பவர்கள் ஒரு இனம், தோட்டம் போடுபவர்கள் ஒரு இனம், கால்நடைகளை வளர்ப்பார்கள் ஒரு இனம் இப்படி அவர்களின் தொழில்முறையிலும் வாழ்க்கை முறையிலுமே சாதிகள் பிரிக்கப்படுகின்றன. எல்லா தொழிலும் அவசியமானதாக பார்க்கப்படுவதால், இந்த அமைப்பில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகள் இருப்பதில்லை.
இந்தியாவில் மட்டுமல்லாமல் மற்ற சில நாடுகளிலும் மனித இனங்களுக்கு இடையில் உயர்வு தாழ்வு என்ற பண்பு சிறிதளவு இருக்கின்றன. ஆனால் மற்ற நாடுகளில் தங்களை உயர்ந்த இனம் என்று நினைப்பவர்கள், தங்களால் தாழ்ந்த இனமாகக் கருதப்படும் நபர்களை விட்டு ஒதுங்கி வாழ்வார்களே ஒழிய, தங்களின் நம்பிக்கையையும் எண்ணத்தையும் மற்ற இனத்தின் மீது திணிக்க மாட்டார்கள். இந்தியாவில் மட்டும்தான் இன்று வரையில் சில சமூகங்கள் தங்களால் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட, சமுதாயம் எந்த வழியிலும் முன்னேறிவிடாமல் தடையாக இருக்கிறார்கள்.