திரிகால ஞானம் பயனுள்ளதா பயனற்றதா? முயற்சியும் உழைப்பும் இருந்தால் திரிகால ஞானத்தை அனைவராலும் அடைந்துவிட முடியும். ஆனால் என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன் அதை அடையாமல் இருக்கும் வரையில்தான் மனிதன் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.
நாளை நடக்கப்போகின்ற ஒரு விசயம் இன்றே தெரிந்துவிட்டால் எப்படி இருக்கும்? அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஒரு வாகன விபத்து இன்றே தெரிந்துவிட்டால் எப்படி இருக்கும்? பத்து வருடங்கள் கழித்து நடக்கவிருக்கும் ஒரு சொத்து இழப்பு இன்றே தெரிந்துவிட்டால் எப்படி இருக்கும்?
உங்கள் அன்புக்குரிய ஒருவர் உங்களுக்குத் துரோகம் செய்யப்போகிறார் என்று முன்கூட்டியே தெரிந்து விட்டால், உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? உங்கள் அன்புக்குரிய ஒருவர் ஒரு குறிப்பிட்ட நாளில் மரணமடையப் போகிறார் என்று உங்களுக்கு முன்கூட்டியே தெரிந்து விட்டால் எப்படி இருக்கும்? மனம் பக்குவ நிலையை எட்டி விட்டவர்களுக்கு இவை எதுவுமே பெரிதாக தெரியாது. ஆனால் மற்றவர்களுக்கு, இந்த விசயங்கள் நடந்து பின் வேதனைகளை உண்டாக்குவதை விடவும். இவ்வாறு நடக்கப்போகிறதே என்ற எண்ணமே பெரும் வேதனையை உண்டாக்கிவிடும்.
உங்கள் அன்புக்குரிய ஒருவர் பல வருடங்களுக்கு முன்பாக உங்களுக்குத் துரோகம் செய்திருக்கிறார் என்பது இப்போது தெரிந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? அல்லது அந்த விசயம் இப்போது தெரிந்ததால் ஏதாவது நன்மை உண்டாக போகிறதா? முடிந்தவை கடந்து சென்றுவிட்டவை அவற்றை அறிந்துக் கொண்டால் என்ன? அறிந்துக் கொள்ளவில்லை என்றால் என்ன? இரண்டுமே ஒன்றுதானே.
பல வேளைகளில் என் குடும்பத்தாருக்கு நடக்கவிருக்கும், துன்பங்களையும், நோய்களையும், நஷ்டங்களையும், மரணங்களையும், முன்கூட்டியே தெரிவித்து இருக்கிறேன். ஆனால் அவர்கள் அவற்றைப் பொருட்படுத்தியதில்லை அலட்சியமாக இருந்துவிட்டு, நான் சொன்ன விசயம் நடக்கும் போது இவன் சொன்னதால்தான் இவ்வாறு நடந்தது என்று, என் மீது பழியைப் போடுகிறார்கள். அவர்கள் என்னை ஏதோ கெட்ட சகுனமாக மட்டும்தான் எண்ணுகிறார்கள்.
இவன் கெட்ட விசயங்களை மட்டும்தான் பேசுவான், எதையுமே தடங்கள் செய்வான் என்று எண்ணுகிறார்கள். அவர்களின் மீது பரிதாபப்பட்டு, அவர்கள் துன்பங்களிலும் கஷ்டங்களிலும் இருந்து தப்பித்து நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் வாழட்டும் என்று நடக்கவிருக்கும் விசயங்களை முன்னெச்சரிக்கை செய்தால், அதை கெட்ட சகுனம் என்கிறார்கள். இவர்களைப் பார்த்து எனக்கு பரிதாபமாகவும் இருக்கிறது, கோபமும் உண்டாகிறது.
ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்துக் கொண்டேன். எந்த மனிதனும் தன் விதியிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. அவனுக்கு விதிக்கப் பட்டவற்றை அனுபவித்தே தீர வேண்டும். இன்று வரையில் நான் எச்சரிக்கை செய்த அத்தனை விசயங்களும் நடந்துவிட்டன. ஆனால், நான் முன்கூட்டியே தெரிவித்தும் அதைப் பயன்படுத்தி துன்பங்களில் இருந்து தப்பித்துக் கொண்டவர்கள், ஒருவர் கூடக் கிடையாது. அதனால் திரிகால ஞானம் இருந்தாலும் எந்த பயனுமில்லை.