திரிகால ஞானம் என்பது என்ன? திரிகாலம் என்ற சொல் மூன்று காலங்களைக் குறிக்கிறது, கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம். இவை மூன்றையும் அறிந்துக் கொள்ளக்கூடிய ஆற்றல்தான் திரிகால ஞானம் என்று அழைக்கப்படுகிறது.
திரிகால ஞானம் உடையவர்கள் தன் வாழ்விலும், தன் அன்புக்குரியவர்களின் வாழ்விலும், தன்னைச் சுற்றியிருப்பவர்களின் வாழ்விலும், எதிர்காலத்தில் நடக்கக் கூடிய முக்கியமான விசயங்களை முன்கூட்டியே அறிந்துக் கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருப்பார்கள். ஒருவர் ஒரு விசயத்தை இவரிடம் கூறும்போதே, அது நடக்குமா நடக்காதா?, வெற்றி பெறுமா பெறாதா? அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும்? என்று முன்கூட்டியே கணிக்கக்கூடிய ஆற்றலையும் பெற்றிருப்பார்கள்.
உறவினர்களின் நோய்களையும், துன்பங்களையும், கஷ்டங்களையும், மரணங்களையும், அவர்கள் வாழ்வில் நடக்கக் கூடிய நல்ல விசயங்களையும், தீய விசயங்களையும் முன்கூட்டியே கணிக்கக் கூடிய ஆற்றலைப் பெற்றிருப்பார்கள். எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் விசயங்கள் மட்டுமின்றி, தற்போது நிகழ்காலத்தில் நடந்துகொண்டிருக்கும் விசயங்களைக் கூட அவை ஏன் நடக்கின்றன? என்ன காரணத்திற்காக நடக்கின்றன? அவற்றின் மூலம் என்ன? அவற்றின் நோக்கம் என்ன? அவற்றின் முடிவுகள் என்னவாக இருக்கும்? என்பனப் போன்ற நிகழ்காலத்தைப் பற்றிய அறிவும், தெளிவும், விளக்கங்களும் இவர்களுக்குக் கிடைத்துவிடும்.
அவற்றைப் போலவே கடந்த காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கான, காரண காரியங்களையும், அவற்றுக்கும் நிகழ்காலத்துக்கும் உள்ள தொடர்புகளையும், அந்த நிகழ்வினால் எதிர்காலத்தில் விளையக்கூடிய விளைவுகளையும், இவர்களால் முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும். பல வருடங்களுக்கு முன்பு செய்த ஒரு காரியம் அல்லது செயலின் விளைவு இன்று நிகழ்காலத்தில் எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் ஆற்றலும் அமையப் பெற்றிருப்பார்கள்.
இன்று செய்து கொண்டிருக்கும் ஒரு காரியம், எதிர்காலத்தில் என்னென்ன விளைவுகளை விளைவிக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆற்றலும் அவர்களுக்கு இருக்கும். ஒரு சிலருக்கு விலங்குகளின் முக்காலத்து வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளும் ஆற்றல் இருக்கும். இன்னும் சிலருக்கு மற்றவர்கள் வாழ்விலும், தனது ஊரிலும், நாட்டிலும், உலகத்திலும் முக்காலத்திலும் நடந்த, நடக்கின்ற மற்றும் நடக்க இருக்கும் நிகழ்வுகளைக்கூட கணிக்கும் ஆற்றல் இருக்கும்.
இவ்வாறு நடந்த நடக்கின்ற மற்றும் நடக்கப்போகின்ற முக்காலத்து விசயங்களையும் அறியக்கூடிய ஆற்றலை திரிகால ஞானம் என்றும். இந்த ஆற்றலை உடையவர்களை திரிகால ஞானிகள் என்றும் அழைப்பார்கள்.
Leave feedback about this