மருத்துவம்

தூங்கி எழுந்தால் எல்லாம் குணமாகும்

தூங்கி எழுந்தால் எல்லாம் குணமாகும். இன்றைய காலகட்டத்தில் உடலில் சிறிய பாதிப்பு உண்டானாலும் மருந்தையும் மருத்துவரையும் மருத்துவமனையையும் நாடுவது பலருக்கு வாடிக்கை ஆகிவிட்டது. மனித உடலுக்கு இயற்கையாக நோய் எதிர்ப்புச் சக்தி இருப்பதையும் அதனால் அனைத்து வகையான உடல் உபாதைகளையும் குணப்படுத்திவிட முடியும் என்பதையும் பெரும்பாலான மனிதர்கள் மறந்து விட்டார்கள்.

உடலின் தன்மையைப் புரிந்து கொள்ளாததன் விளைவாக எங்குத் திரும்பினாலும் மருத்துவமனைகளும் மருந்தகங்களும் பெருகிவிட்டன. உடலின் தொந்தரவுகளுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்து மாத்திரைகள் பெரும்பாலும் உடல் உபாதைகளைக் குணப்படுத்தாமல் அவற்றை உடலுக்குள்ளேயே அடக்கி வைக்கும் வேலையைத் தான் செய்கின்றன. இவ்வாறு மருந்து மாத்திரைகளின் மூலமாக அடக்கி வைக்கப்படும் உபாதைகளும் உடற்கழிவுகளும் சிறுகச் சிறுக உடலில் உள்ளே சேர்ந்து ஒரு நாள் பெரிய தொந்தரவாகவும் ஆபத்தான நோயாகவும் வெளிப்படுகின்றன.

இளம் வயது முதலாக நம் உடலில் சிறுசிறு தொந்தரவுகளும் காயங்களும் உண்டாகிக் கொண்டுதான் இருந்திருக்கும் அவை சுயமாகக் குணமான அனுபவமும் நம் அனைவருக்கும் இருக்கும். இதுவரையில் நம் உடலில் குணமான உடல் தொந்தரவுகளையும், வலி வேதனைகளையும், காயங்களையும், கொண்டு நம் உடலுக்குக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

தூக்கம் என்பது மனிதர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். அதுவும் தூக்கம் இரவு நேரத்தில் தான் இருக்க வேண்டும், பகலில் உறங்குவது ஓய்வு என்ற நிலையில் வருமே ஒழிய அது உடலுக்கு மிகவும் அவசியமான உறக்கம் என்ற நிலையை அடையாது. மனிதர்களின் உடல் அவர்கள் தூங்கும் போதுதான் தனது நோய்களையும் தொந்தரவுகளையும் சரி செய்து கொள்கிறது.

பலருக்குத் தலைவலி, வயிற்று வலி, கால் வலி, மயக்கம், இரத்த அழுத்தம், வாந்தி, அசதி, சோர்வு போன்ற தொந்தரவுகள் இருந்து தூங்கி எழுந்ததும் அவை குணமான அனுபவம் இருக்கலாம். உங்களுக்கோ குடும்ப உறுப்பினர்களுக்கோ உடலில் சிறிய அல்லது பெரிய தொந்தரவு அல்லது உபாதை இருந்தால், தினமும் இரவில் நன்றாகத் தூங்கி எழும்போது அவை விரைவாகக் குணமாகும்.

உடலில் பாதிப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக இரவு 9 மணிக்குள் படுக்கைக்குச் சென்று விட வேண்டும். இரவு உணவை மாலை 6 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் படுக்கைக்குச் செல்லும் நேரத்தில் வயிற்றில் உணவு இல்லாமல் இருப்பது சிறந்தது. கடுமையான நோயோ தொந்தரவோ உள்ளவர்கள் இரவு நேரத்தில் உணவை உட்கொள்ளாமல் அல்லது பழங்களை மட்டுமே உட்கொண்டு விட்டு படுக்கைக்குச் செல்வது மிகவும் நல்லது. காலியான வயிற்றில் உறங்கும் போது நோய்கள் மிக விரைவில் குணமாகும்.

ஒரே நாளில் தொந்தரவுகள் குணமாகி விட வேண்டும் என்று எண்ணாமல் தொடர்ந்து இவ்வாறு விரைவாகப் படுக்கைக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து விரைவாக காலி வயிற்றுடன் படுக்கைக்குச் செல்லும் போது ஒரு சில வாரங்களிலேயே தொந்தரவுகள் குறைவதை உங்களால் கண்கூடாகக் காண முடியும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field