வாழ்க்கை

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஜாக்கிரதை

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஜாக்கிரதை. இன்றைய கால கட்டத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பல கார்ட்டூன்களில் முதன்மை காட்சிகளாக நகைச்சுவைகள் வடிவமைக்கப் பட்டிருக்கின்றன, ஆனால் அவற்றின் ஓரங்களில் காமம், கோபம், வெறுப்பு, வெறி, வன்முறை, மற்றும் தீய எண்ணங்களைத் தூண்டக் கூடிய கட்சிகளும் காட்டப்படுகின்றன. கார்ட்டூன்களை பார்க்கும் நாமும் நம் குழந்தைகளும் பெரும்பாலும் அவற்றைக் கவனிப்பதில்லை.

கார்ட்டூன்களில் காட்டப்படும் தவறான விசயங்களையும், காட்சிகளையும், குழந்தைகள் விழிப்புணர்வோடு கவனிக்காவிட்டாலும்; குழந்தைகளின் மனமானது உன்னிப்பாக கவனித்து அவற்றை பதிவு செய்துகொள்ளக் கூடும். இதுவே பின்னாட்களில் குழந்தைகள் பெற்றோர்களை வெறுப்பதற்கும், எதிர்ப்பதற்கும், சக பிள்ளைகளுடன் வம்புகள் செய்வதற்கும், சமுதாயம் வெறுக்கக்கூடிய சில செயல்களைச் செய்வதற்கும் முக்கிய காரணமாக அமைகிறது.

மேற்கத்திய நாடுகளின் குடும்ப உறவுகளைப் போன்று, குடும்ப அமைப்பைச் சிதைத்து, குடும்ப உறவுகளைப் பிரித்து அன்பு என்ற உணர்வே இல்லாத வகையில் குழந்தைகளை மாற்றுவதற்காகவே, சில கருத்துக்களும், சில காட்சிகளும், புத்தகங்களும், நாளிதழ்களும், நடத்தப்படுகின்றன. பெற்றோர்கள் இவற்றை உன்னிப்பாக கவனித்து பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு எது தேவை, எது தேவையில்லை, என்பதை தெளிவாகப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

நாம் காண்பவற்றிலிருந்து உருவாகும் மனப் பதிவுகள் நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. நம் குழந்தைகள் காண்பவற்றிலிருந்து உருவாகும் மனப் பதிவுகள் அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றன.

தீயவற்றையும், தேவை இல்லாதவற்றையும் பிள்ளைகள் பார்க்காமல், எச்சரிக்கையாக இருக்க வேண்டும், அதுவே அவர்களின் எதிர்காலத்துக்கு நன்மையாக அமையும். உங்கள் குழந்தைகள் சிறுவயது முதலாக எவற்றைப் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள், வாசிக்கிறார்கள், செய்கிறார்கள், என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். வெள்ளம் வருமுன் அணைப்போட வேண்டும்.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதிர் காலத்தில் அவர்கள் சிறந்த மனிதர்களாக வாழ உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X