திருமண பந்தம் மகிழ்ச்சியாக நீடிக்க சில ஆலோசனைகள். வெவ்வேறு குடும்பங்களில், சூழ்நிலைகளில் பிறந்து வளர்ந்த இருவர் இணைந்து, மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்வதற்கு நடத்தப்படும் சடங்கு தான் திருமணம். இந்த உறவு நிலைப்பதற்கும் மகிழ்ச்சியாக அமைவதற்கும் சில குறிப்புகள்.
கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக அமைவதற்கு முதல் நிபந்தனை என்னவென்றால், கணவன் மீது மனைவிக்கோ, மனைவி மீது கணவனுக்கோ எந்த எதிர்பார்ப்பும் இருக்கக் கூடாது. கணவனும் மனைவியும் தன் ஜோடி எப்படி இருந்தாலும், உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொள்ள வேண்டும். என் கணவன் ஏன் அப்படி இல்லை, ஏன் அவர் போல் இல்லை, ஏன் இவர் போல் இல்லை என்று மனைவியோ. என் மனைவி ஏன் அந்தப் பெண் போல் இல்லை, இந்த பெண் போல் இல்லை, என்று கணவனோ நினைக்கக் கூடாது.
கணவன் மனைவி என்று இணைந்த பிறகு, தன் ஜோடியின் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி கேட்கக்கூடாது. திருமணமாவதற்கு முன் அவர் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும், என்ன குணாதிசயங்கள் இருந்தாலும், அதை மறந்து மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் தன்னுடைய கடந்த கால கசப்பான அல்லது தவறான செயல்கள் எதையுமே கணவனிடமோ மனைவியிடமோ கூறக்கூடாது. கடந்த கால வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று நான் கூறுவதற்குக் காரணம்; நீங்கள் கூறும் அந்த ஒரு நிகழ்வே உங்கள் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் செய்து விட வாய்ப்பிருக்கிறது.
சுருக்கமாகச் சொல்வதானால் உங்கள் கணவனையோ மனைவியையோ எந்த ஒரு நபருடனும் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருந்தால்; உங்கள் மகிழ்ச்சி எந்தக் காலத்திலும் குறைய வாய்ப்பே கிடையாது.
கணவன் மனைவி விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்று கூறுவார்கள், அதில் எனக்கு உடன்பாடு கிடையாது. கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ வேண்டும். இதுதான் என் மனைவியின் குணம், இதுதான் என் கணவரின் குணம் என்ற தெளிவு இருந்தால்; அந்த உறவு எல்லாக் காலத்திலும் மகிழ்ச்சியாகவே இருக்கும்.