குறள் 946
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும், கழிபேர் இரையான்கண் நோய்.
குறளின் உரை
உணவை பசியின் அளவுக்கு குறைவாக உண்பவனிடத்தில் ஆரோக்கியம் நிலைத்து நிற்பதைப் போலவே, பசியின் அளவுக்கும் மிகுதியாக உண்பவனிடத்தில் நோய்கள் நிலைத்து நிற்கும்.
குறள் விளக்கம்
பசி உண்டான பிறகு, பசியை அறிந்து உண்பவன் எந்த நோய்க்கும் ஆளாகாமல், ஆரோக்கிய வாழ்வில் நிலைத்திருப்பான். அதைப்போலவே பசியில்லாமல் ஆசைக்கும் இச்சைக்கும் ஆளாகி உண்பவன், அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளும் வரையில் நிரந்தர நோயாளியாகவே இருப்பான், என்கிறார் திருவள்ளுவர்.
பசியையறிந்து பசியின் அளவுக்கு உண்பவனுக்கு எந்த நோயும் அண்டாததால் அவன் என்றுமே ஆரோக்கியமாக இருப்பான். ஆனால் பசியில்லாமல், பசியைவிட அதிகமாக உண்பவன் உடலில் நோய்கள் தோன்றத் தொடங்கும். அவன் தன் நோய்களுக்கு என்னதான் வைத்தியம் பார்த்தாலும். அவனது நோய்களின் தன்மைகள் மாறுமே ஒழிய, நிரந்தரமாக உடலை விட்டு நீங்காது. அவன் நிரந்தர நோயாளியாகவே இருக்க நேரிடும்.