குறள் 944
அற்றது அறிந்து கடைப்பிடித்து, மாறல்ல துய்க்க துவரப் பசித்து.
குறளின் உரை
ஆசைக்கும் சுவைக்கும் அடிமையாகி அதிகமாக உண்ணாமல். உண்ட உணவு ஜீரணமாகி, நன்றாக பசிக்கும்போது உடலுக்கு ஒத்துக் கொள்ளக் கூடிய உணவுகளை உட்கொள்வதை வாழ்க்கை நெறியாக கடைப்பிடிக்க வேண்டும்.
குறள் விளக்கம்
ஆரோக்கியமாக வாழ விரும்புவோர், முந்தைய வேளையில் உண்ட உணவு ஜீரணமாகி மீண்டும் பசித்தால், உடலுக்கு ஒத்துக்கொள்ளும் நல்ல ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உட்கொள்வேன் என்பதை, வாழ்க்கை நெறியாகவே வைத்திருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
பிடித்த உணவாக இருந்தாலும், சுவையான உணவாக இருந்தாலும் பசி இல்லை என்றால் அதை உண்ண மாட்டேன் என்பதைக் கடைப்பிடித்தால், நோய்கள் உருவாக வாய்ப்பே கிடையாது. கடைப்பிடித்தல் என்பதற்கு இறுதிவரையில் பின்பற்றுதல் என்று பொருள்படும். பசித்தால் மட்டும் உணவை உட்கொள்ளும் பழக்கத்தை சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரையில் அனைவரும் இறுதிவரையில் பின்பற்ற வேண்டும் என்கிறார்.