தேவைகளை நிறைவேற்ற பிரபஞ்சம் காத்திருக்கிறது
1. ஒரு மனிதன் விரும்பும் அனைத்தையும் அவனால் அடைந்துவிட முடியுமா?
2. அவனது ஆசைகள் நிறைவேற என்னென்ன செய்ய வேண்டும்?
3. கடவுளும் இயற்கையும் எந்த வகையில் மனிதர்களுக்கு உதவுவார்கள்?
இவ்வாறான கேள்விகளுக்கு விடைகாண ஒரு உதாரணத்தைக் கூறுகிறேன்.
ஒரு விவசாயி கால நேரம் கருதாமல் கடுமையாக உழைப்பதின் நோக்கமென்ன? அவரின் தேவையென்ன? ஒரு விவசாயியின் மிகப்பெரிய ஆசை போதிய விளைச்சலாகத் தானே இருக்கும்? அவர் ஆசைப்பட்டதைப் போலவே வயல் முழுவதும் நெற்கதிர்கள் விளைந்து நிற்கின்றன. அவரின் தேவை நிறைவேறுகிறது.
அந்த விளைச்சலை உண்டாக்க, நேரடியாக அந்த நெற்கதிர்களுக்கு அவர் எதையாவது செய்தாரா? அந்த நெற்பயிர்களுக்கும் அவருக்கும் ஏதாவது நேரடித் தொடர்புகள் உள்ளனவா? எதுவும் கிடையாது, ஆனாலும் அவர் ஆசைப்பட்ட விளைச்சல் உருவாகிறது.
அப்படியென்றால், அந்த நெற்பயிர்கள் உருவாக அவர் எதுவும் செய்யவில்லையா? என்றால்… செய்யாமல் எப்படி இருப்பார்? கால நேரம் பார்த்து சரியான நேரத்தில், முறையாக நிலத்தை உழுதார், நீர் பாய்ச்சினார், விதைநெற்களைத் தூவினார், தேவைப்படும் போதெல்லாம் நீர் பாய்ச்சினார், இயற்கை உரம் இட்டார், களை எடுத்தார், நெற்பயிர்கள் உருவாகத் தேவையான சூழ்நிலைகளைச் சரியாக அமைத்துத் தந்தார். இயற்கை அவருக்கு உதவி செய்தது. அவரின் உழைப்புக்கு ஊதியம் கிடைத்தது, அவர் ஆசைப்பட்ட விளைச்சல் உருவானது. மற்றபடி அந்த நெற்பயிர்களுக்கும், அவருக்கும் எந்த நேரடித் தொடர்பும் இல்லை.
இவ்வாறுதான் மனிதனின் தேவைகளும் பூர்த்தியாகின்றன
மனிதனுக்குத் தேவையான அனைத்தையும் பிரபஞ்சம் வழங்கும். அவனின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். ஆனால் அதன் மீது அவனுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. மனிதனுக்கு ஆசைப்படும் உரிமையுண்டு, ஆனால் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்கும் அதிகாரம் கிடையாது. மனிதன் எதற்காக உழைக்கின்றானோ, அது மட்டுமே அவனுக்குக் கிடைக்கும். நல்லதோ, கெட்டதோ, எதற்காக உழைத்தாலும் இயற்கை உதவி செய்யும், அதற்கான பலன் கிடைக்கும். எந்த மனிதனின் வாழ்க்கையிலும் கடவுளும், இயற்கையும், குறுக்கிட மாட்டார்கள். தனக்குத் தேவையானவற்றை தானே தேடிக்கொள்ளும் முறையில்தான் மனிதர்கள் படைக்கப் பட்டிருக்கிறார்கள்.
இந்த இரகசியத்தைப் புரிந்துக் கொள்ளாமல் ஆசைகளை மட்டும் உருவாக்கிக் கொள்வதில் எந்த பயனுமில்லை. உங்களின் தேவைகள் நிறைவேற, மேலே குறிப்பிட்ட விவசாயியைப் போன்று தேவையான உழைப்பை சரியான முறையில் வழங்குங்கள். பலனைப்பற்றி கவலைப்படாதீர்கள், பயப்படாதீர்கள். முயற்சிக்கும் உழைப்புக்கும் ஏற்ற பலன் நிச்சயமாக கிடைக்கும்.
குறள் 619
தெய்வத்தான் ஆகா தெனினும், முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.