வாழ்க்கை

தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் தடுப்பது எப்படி?

இளம் பருவத்தினர் தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் தடுப்பது எப்படி? பெற்றோர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம், பிள்ளைகள் மனதில் உண்டாகும் சந்தேகங்களாலும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையினாலும் தான் தவறான பாதைக்குச் செல்கிறார்கள். பிள்ளைகள் பிறக்கும் போது மனம் இருப்பதில்லை, அவர்கள் வளரும்போது மனமும் சேர்ந்து வளர்கிறது. மனம் வளர தொடங்கியவுடன் பிள்ளைகள் கேள்விகள் கேட்க தொடங்குகிறார்கள்.

சந்தேகங்களை கேள்விகளாக கேட்டு, புதிய விசயங்களைக் கற்றுக்கொள்ளும் பிள்ளைகள்; ஒரு கால கட்டத்தில் தனது சந்தேகங்களை தானே செய்து பார்த்து அறிந்துகொள்ள விழைகிறார்கள். பிள்ளைகளின் அறிந்துக் கொள்ளும் ஆர்வத்தின் ஒரு பக்க விளைவுதான் தீய பழக்கங்கள்.

பிள்ளைகள் தீய பழக்கங்களுக்கு ஆளாகாமல் இருக்க, முதலில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அதிகமான அறிவுரைகள் சொல்வதை நிறுத்த வேண்டும். அவர்களை சுயமாக சிந்திக்க அனுமதிக்க வேண்டும். பிள்ளைகள் பெற்றோர் சொல்வதைக் கேட்டு வளர்வதில்லை, மாறாக பெற்றோர்களின் நடவடிக்கைகளை பார்த்துதான் வளர்கிறார்கள் என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை பெற்றோர்கள் தான் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்ட வேண்டும். அதைப்போலவே ஒழுக்கமாக வாழும் மனிதர்களின் நட்பையும் உறவையும் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் உருவாக்கித்தர வேண்டும்.

பிள்ளைகளுடன் அன்பாகவும் நட்பாகவும் பழக வேண்டும். தினமும் பிள்ளைகளுடன் பேசி பள்ளிக்கூடத்தில் நடந்தவற்றை அறிந்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகள் செல்லும் இடங்கள், அவர்கள் பழகும் நண்பர்கள் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகள் நண்பர்களின் வீட்டுக்கோ, விளையாடவோ, வெளியிலோ செல்லும்போது அவ்வப்போது பெற்றோர்கள் உடன் செல்ல வேண்டும் அல்லது பெற்றோர்கள் அவர்களின் வாகனத்தில் அழைத்துச் செல்ல வேண்டும்.

பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும்; ஆனால் அன்பு காட்டுவதாக நினைத்துக் கொண்டு அதிகச் செல்லம் கொடுத்துக் கெடுத்துவிடக் கூடாது. அன்பைக் காட்டுவதிலும் அளவோடு இருக்க வேண்டும்; அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும். அளவுக்கு மீறிய செல்லம் உங்கள் பிள்ளைகள் தீய வழிகளில் செல்வதற்கு வழிவகுக்கும்.

உங்கள் வாழ்க்கையில் நடந்த கசப்பான நிகழ்வுகளைச் சுருக்கமாக கூறி அதிலிருந்து எவ்வாறு வெளி வந்தீர்கள், அவற்றிலிருந்து என்ன புரிந்துகொண்டீர்கள் என்பதை உங்கள் பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் காட்டப்படுபவை முழுமையான உண்மைகள் அல்ல, அவை வெறும் நடிப்பு என்பதை சிறுவயது முதலே பிள்ளைகளுக்குப் புரிய வையுங்கள். சினிமா பைத்தியமாக மாறாமல் பிள்ளைகளைப் பாதுகாத்து கொள்ளுங்கள்.

பிள்ளைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். உங்கள் பிள்ளைகள் வாசிக்க வேண்டும் என்றால் முதலில் நீங்கள் வாசிக்கத் தொடங்க வேண்டும். நீங்கள் வாசிக்கத் தொடங்கினால் அதைப் பார்த்து உங்கள் பிள்ளைகளும் வாசிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.

உங்கள் பிள்ளைகளுடனும், குடும்பத்துடனும் அதிக நேரத்தைச் செலவிடுங்கள், ஒன்றாக இரவு உணவை உட்கொள்வது, குடும்பத்துடன் படம் பார்க்கச் செல்வது, கடற்கரைக்கு பூங்காக்களுக்குச் செல்வது, உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வது போன்ற பழக்கங்களை ஏற்படுத்துங்கள்.

குடும்பத்துடன் அன்னோனியமாக இருக்கும் பிள்ளைகளில் 80% பிள்ளைகள் தீய பழக்கங்களுக்கு ஆளாவதில்லை. குடும்பத்தையும் குடும்பத்தினரின் அன்பையும் இழந்த பிள்ளைகள் தான் அதிக அளவில் தீய பழக்கங்களுக்கு ஆளாகின்றனர்.

மனோதத்துவத் தீர்வு

நெல் விவசாய நிலங்களில் எந்த வயலுக்கு நீரோட்டத்தைத் தடுக்க வேண்டுமோ அந்த வரப்பை அடைத்து; எந்த வயலுக்கு நீர் பாய்ச்ச வேண்டுமோ அதற்கு தக்கவாறு அதன் வரப்பை வெட்டி விடுவார்கள். அதைப் போன்றே உங்கள் பிள்ளைகளின் தீய செயல்களுக்கு எது காரணமாக இருக்கிறது என்று கவனித்து, அதைத் தடுத்து; உங்கள் பிள்ளைகள் எவ்வாறு வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ அதற்கு ஏற்றாற்போல் அவர்களின் தினசரி வாழ்க்கையை மாற்றுங்கள். புதிய பொழுது போக்கு அல்லது விளையாட்டுகளில் ஈடுபடத் தூண்டி விடுங்கள். அவர்களின் சிந்தனையை மாற்றுங்கள்.

முழுமையான தீர்வு

இளம் பிள்ளைகள் தீய பழக்கங்களுக்கு ஆளாகாமல் தடுக்க வழி அவர்களின் சிந்தனையையும், அவர்களின் தேடுதலையும் மாற்றிவிடுவது மட்டுமே. அறிவுரைகள் கூறி யாரையும் திருத்த முடியாது. படிக்கும் பழக்கமும், குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும், நல்ல மனிதர்களின் பழக்கமும் நட்பும், மற்றும் புதிய நல்ல பொழுது போக்கும் விளையாட்டுகளுமே, நிரந்தரமான தீர்வை தரும். இளம் தலைமுறையினரைப் பாதுகாப்போம், ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவோம்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field