தீய மனிதர்களால் உண்டாகும் துன்பங்கள். நல்லவர்கள் அவர்களின் ஒழுக்கத்திற்கும், நல்ல எண்ணத்திற்கும், நல்ல செயல்களுக்கும், உரிய பலன்களை நிச்சயமாக அனுபவிப்பார்கள். அதே நேரத்தில் தீயவர்கள் தீய செயல்களைச் செய்யும் போது அதில் சில நல்லவர்களும் பாதிக்கப்படலாம், இதை மாற்ற முடியாது. வயலில் விளைந்திருக்கும் களைகளைப் பறிக்கும் பொழுது ஒரு சில நெல் கதிர்களும் களைகளோடு சேர்ந்து போய்விடும். இது திட்டமிடப்பட்ட செயலோ அல்லது இயற்கையின் நீதியோ அல்ல, களைப் பறிப்பவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உரிமை. நெல்லுக்கு எந்த அளவு உரிமை இருக்கிறதோ அதே அளவு உரிமைகளைப் பறிப்பவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. நிலத்தில் வளர்வது நெல்லுக்கும் புல்லுக்கும் உரிமை அதே நேரத்தில் அவற்றை மனிதர்கள் விதைப்பதையும் வளர்ப்பதையும் பறிப்பதையும் இயற்கை அனுமதிக்கின்றது.
அதைப்போலவே நல்ல மனிதர்கள் பூமியில் அமைதியாகவும், நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும், வாழ்வது அவர்களின் உரிமை. அவர்களின் நல்ல வாழ்க்கைக்கு அனைத்து வகையிலும் இயற்கையும் இறைவனும் உறுதுணையாக இருப்பார்கள். ஆனால் நல்ல மனிதர்களுக்குத் தீய மனிதர்களால் ஏதாவது தீங்கு ஏற்பட்டால் அதை யாரும் வந்து தடுக்க மாட்டார்கள். இது சத்தியமான உண்மை. தமிழ்த் திரைப்படங்களில் வருவதைப்போல நல்லவர்களுக்கு தீங்கு ஏற்படும் போது தெய்வங்களோ, ஞானிகளோ, பிற மனிதர்களோ, மற்ற உயிரினங்களோ, உதவிக்கு வருவார்கள் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது.
அப்படியென்றால் யாரும் நல்லவர்களாக வாழத் தேவையில்லை அல்லவா. அவ்வாறில்லை… நல்லவர்களுக்கு ஒரு துன்பமோ, துயரமோ உருவாவதற்கு முன்பாகவே அவர்களுக்கு முன்னறிவிப்பு செய்யப்படும். எந்த இடத்தில் அவர்களுக்குத் தீங்கு நடக்க வாய்ப்பு இருக்கிறதோ அந்த இடத்திற்கு அவரை செல்ல விடாமல் அனைத்து வகையான தடங்கல்களும் உருவாகும். நல்லவர்களின் வாழ்க்கையில் தீய விசயங்கள் நடக்காமல் எல்லா வகையிலும் இயற்கை அவர்களைப் பாதுகாக்கும். இயற்கையின் எல்லா அறிவிப்புகளையும், வழிகாட்டுதல்களையும், தடைகளையும், மீறிச் சென்று ஒரு துன்பத்தில் சிக்கிக் கொண்டால் அவர்கள் தான் அதிலிருந்து சுயமாக மீண்டுவர வேண்டும்.
Leave feedback about this