தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிகள். அண்மைக்காலங்களில் நாளிதழ்களிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் நாம் அதிகமாக காணக்கூடிய ஒரு செய்தி தற்கொலை, தற்கொலை முயற்சி மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல். ஒரு காலத்தில் வாழ வழியில்லாமலும், வாழத் தெரியாமலும், ஒடுக்குமுறைகளாலும் பல தற்கொலைகள் நடந்தன. பின்பொரு காலத்தில் காதல் தோல்வி, குடும்பப் பிரச்சனைகள், வாழ்க்கையில் தோல்வியென, பல காரணங்களுக்காக தற்கொலைகள் நடந்தன. எந்தக் காரணத்துக்காக நடந்தாலும், தற்கொலை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு முடிவுதான்.
ஓரறிவு ஜீவன்கள் முதலாய அத்தனை ஜீவன்களுக்கு இந்த உலகில் பறந்து விரிந்து வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றின் வாழ்விலும் பல இன்னல்கள் வந்துபோகின்றன. அவை எந்த இழப்புக்காகவும், எந்த பிரிவுக்காகவும், எந்த காரணத்துக்காகவும் தற்கொலை செய்து கொள்வதில்லை. அநியாயம் இழைக்கப்பட்ட, அனாதையான, உடல் ஊனமான விலங்குகள் கூட தைரியமாக வாழ்கின்றன, ஆனால் மனிதர்கள் மட்டும் வாழ்க்கையைக் கண்டு அச்சப்பட்டு தற்கொலை செய்துகொள்ள துணிக்கிறார்கள். சாவதற்கு அவர்களிடம் இருக்கும் துணிச்சல் கூட வாழ்வதற்கு இருப்பதில்லை.
அறியாதவர்கள், தெரியாதவர்கள், அறியாமையில் இருப்பவர்கள், பலவீனமானவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்துகொண்ட காலம் மாறி, தற்போது படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள், வசதி படைத்தவர்கள் தற்கொலை செய்துகொள்ளத் தொடங்கிவிட்டார்கள். இந்த உலகில் மனிதப் பிறப்பு எடுத்தது வாழ்வதற்காக, அந்த வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்குக் கூட கற்றுத்தராத இந்த கல்விமுறையின் பயன் தான் என்ன?
தற்கொலைக்கு மிக முக்கிய காரணமாக நான் பார்ப்பது குடும்பங்களின் சிதைவுதான். கூட்டுக் குடும்பங்கள் என்பவை அடக்குமுறை, ஒடுக்குமுறை, கூட்டுக் குடும்பங்களில் பெண்களுக்கு சுதந்திரமில்லை, உழைப்புகள் சுரண்டப்படுகின்றன என்று பல்வேறு காரணங்களைக் கூறி சிறு சிறு குடும்பங்களாகி. பின்னர் அதுவும் சுருங்கி ஒரு பெற்றோர் ஒரு குழந்தை என்ற நிலையை உருவாக்கிக் கொண்டார்கள்.
இவற்றுக்குக் காரணம் மனிதர்களின் அச்ச உணர்வு, அறியாமை, மற்றும் மேற்கத்திய நாகரீக மோகம். தாய் தந்தை, அண்ணன் தம்பி, அக்காள் தங்கை, தாத்தா பாட்டி, சித்தப்பா சித்தி, பெரியப்பா பெரியம்மா, மாமா மாமி, என்று வாழ்வாங்கு வாழ்ந்த குடும்பங்களும், சமுதாயமும் மாறி, சிறைக் கைதிகள் போன்று இரண்டு மூன்று நபர்களாக வாழத் தொடங்கியதன் விளைவுதான் இது.
சிறு குடும்பங்களில் வளர்ந்த மனிதர்களின் மனதில் பெரும்பாலும் தைரியம் போதவில்லை, பிரச்சனைகளைச் சந்திக்கும் மனோபலம் இருப்பதில்லை, எனக்கு யாருமில்லை, நான் தனியாக இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மை உருவாகிறது. மேலும் அவர்களுக்கு உறவின் நெருக்கமும் வழிகாட்டுதல்களும் கிடைப்பதில்லை. ஒரு சின்ன பிரச்சனை தொற்றினாலும் நான் தனியாக இருக்கிறேன் எனக்கு யாருமில்லை என்று அஞ்சி பிரச்சனைகளுக்குத் தீர்வை தேடாமல், குறுக்குவழியை நாடுகிறார்கள்.
மனித உடலில் நோய் தோன்றுவதற்கு முன்பாகவே அதற்கான மருந்து தோன்றிவிடும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதைப்போன்றே மனித வாழ்க்கையில் ஒரு பிரச்சனை தோன்றுவதற்கு முன்பாக நிச்சயமாக அதற்கான தீர்வு தோன்றியிருக்கும். அந்த தீர்வைத் தேடும் தைரியமில்லாமல் தற்கொலைக்குத் துணிவது கோழைத்தனம் மட்டுமல்ல, மடத்தனம். மனத் தைரியமும், எந்தப் பிரச்சனையையும் எதிர்கொள்ளும் துணிவும் இருந்தால் தற்கொலை என்ற பேச்சே எழாது. ஆனால் மன தைரியத்தை திடீரென உருவாக்க முடியாது. மனதின் திடம், தைரியம் என்பது புரிதலினால் உண்டாகும் துணிவாக இருக்க வேண்டும். வெறுமனே வாயால் சுடும் வடையாக இருக்கக் கூடாது.
பல வேளைகளில் மனிதர்களை தற்கொலைக்குத் தூண்டுவது அடுத்தவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்ற அச்ச உணர்வுதான். குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார்கள் நம்மைப் பற்றி அவதூறு பேசுவார்கள், தாழ்த்திப் பேசுவார்கள் என்ற அச்சத்தில் சிலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். மனிதர்களுக்குத் துன்பத்தில் உதவாத உறவினர்களுக்கும், துன்பத்தில் துணைநிற்காத, தவித்த வாய்க்குத் தண்ணீர் தராமல் குறைமட்டும் கூற தயாராக இருக்கும் இந்த உறவுகளுக்கும் சமுதாயத்துக்கும் அஞ்சி தற்கொலை செய்துகொள்வது போன்ற ஒரு மடமை உண்டா?