தரையில் ஓடு, வானில் பறக்கலாம், விமானம் வானத்தில் பறப்பதற்காக வடிவமைக்கப்பட்ட வாகனம், ஆனால் தரையில் பயணிக்காமல் அதனால் வானில் பறக்க முடியாது. தரையில் நகர்ந்துக் கொண்டே இருக்கும் விமானம்தான் சூழ்நிலை அமையும் போது வானில் பறக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கும். நான் வானில் பறக்க மட்டுமே செய்வேன், தரையில் ஊர்ந்து செல்ல மாட்டேன் எனும் விமானம் எந்தக் காலத்திலும் வானில் பறப்பதில்லை.
வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளைப் புரிந்துகொண்டு, அனைத்தையும் கடந்து பயணத்தைத் தொடரும் மனிதர்கள்தான் தனக்கு உரிய நேரம் வரும்போது வானில் சிறகை விரித்துப் பறக்கிறார்கள். சரியான நேரமும் வாய்ப்பும் வரட்டும் என்று காத்திருக்கும் மனிதர்களின் கால்களில் சோம்பல் மற்றும் இயலாமை எனும் சங்கிலிகள் பிணைக்கப் பட்டிருக்கின்றன.
பின்னாட்களில் பறப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தாலும் அறியாமை அவர்களின் கண்களை மறைத்து விடுகிறது. இயலாமை சோம்பல் எனும் சங்கிலிகள் அவர்களின் எடையை அதிகரித்து விடுகிறது, அதனால் பறக்கும் துணிச்சல் அவர்களுக்கு உருவாவதில்லை.
சரியான வாய்ப்புக்கும் சந்தர்ப்பத்துக்கும் காத்திருக்கக் கூடாது, இப்போதே கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிறிய பாதையாக இருந்தாலும் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் போது சிறகை விரித்துப் பறக்கலாம்.
ஓட முடிந்தவர்கள் ஓடுங்கள், நடக்க முடிந்தவர்கள் நடந்து கொண்டே இருங்கள், முடியாதவர்கள் தவழ்ந்தாவது உங்கள் இலக்கை நோக்கிப் பயணியுங்கள். எவ்வாறாயினும் இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டே இருங்கள், நின்றுவிடாதீர்கள்.
2 Comments