நம்பிக்கையும் ஈர்ப்பு சக்தியும். ஒரு மனிதனின் வாழ்க்கை எவ்வாறு அமையப் போகிறது என்பதை அவனது மனம் தான் முடிவு செய்கிறது. ஒரு மனிதனின் மனதில் பதிந்திருக்கும் பதிவுகளுக்கு ஏற்பவும் அந்த மனதின் தன்மைக்கு ஏற்பவுமே அவனது வாழ்க்கை அமையப் போகிறது.
வாழ்க்கையை மேன்மையான நிலைக்கு உயர்த்தி செல்ல வேண்டும் என்று விரும்புபவர்களும் திருப்தியான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்புபவர்களும் முதல் வேலையாக தங்களின் எண்ணத்தையும் சிந்தனையையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஈர்ப்பு சக்தி என்பது ஒரே தன்மையுடைய இரண்டு விசயங்களை இணைக்கும் பாலமாகும். மனம் எனும் பேராற்றலுக்கு ஏற்றவாறு இந்த ஈர்ப்பு சக்தி செயல்படுகிறது. இரும்பு துகள்களை ஈர்க்கும் காந்தத்தைப் போன்று மனிதனின் மனமானது, அந்த மனதில் பதிந்திருக்கும் பதிவுகளுக்கும், சிந்தனைகளுக்கும், அந்த மனதில் பிரதிபலிக்கும் எண்ணங்களுக்கும், ஏற்ப அந்த மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான விசயங்களை அவனை நோக்கி ஈர்க்கிறது
ஒரு மனிதனின் மனம் எதை அடிக்கடி சிந்திக்கிறதோ அதையே அவன் தன் வாழ்க்கைக்குள் ஈர்க்கிறான். எதன் மீது ஒரு மனிதன் நம்பிக்கை கொள்கிறானோ அதுவே அவனுக்கு நடக்கப் போகிறது. மனம் எதைத் தேடுகிறதோ அதுவே அவனை நோக்கி வருகிறது.
இந்த உலகம் முழுமையும் மனிதர்களுக்காகப் படைக்கப்பட்டதுதான். இதில் உள்ள இன்பங்களும், செல்வங்களும், பொருட்களும், தங்கு தடையில்லாமல் அனைத்து மனிதர்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பொதுவில் வைக்கப்பட்டிருக்கின்றன. திறமையுள்ள எவரும் அவற்றை ஈர்த்து அனுபவித்துக் கொள்ளலாம்.
எந்த மனிதர் தனது சிந்தனையில் எண்ணத்தில் தன் தேவையை அடைய வேண்டும் என்று உறுதியுடன் இருந்து, தனக்குத் தேவையான விசயத்தை ஈர்க்கும் அளவுக்கு தன் தகுதியை வளர்த்துக் கொள்கிறாரோ, அவர் விரும்பும் விசயம் அவரை நோக்கித் தானாக வருகிறது. அதற்காக அவர் எந்த கடுமையான முயற்சியும் செய்ய வேண்டிய தேவையில்லை.