தனியார் மருத்துவமனைகளும் கோவிட் நோயாளிகளும். கொரோனா தொற்று உள்ளவர்களையும், தீவிர சிகிச்சைகள் தேவைப்படுவோரையும் சில தனியார் மருத்துவமனைகள் எவ்வாறு இனம் காண்கிறார்கள்?
தீவிரச் சிகிச்சை தேவைப்படுவோரின் அறிகுறிகள்.
1. விலை உயர்ந்த காரில் மருத்துவமனைக்கு வருவார்கள், குறைந்தபட்சம் காரின் மூலமாக மருத்துவமனைக்கு வருவார்கள்.
2. தங்க நகைகளை அணிந்திருப்பார்கள்.
3. விலை உயர்ந்த ஆடைகளை உடுத்தி இருப்பார்கள்.
4. விலை உயர்ந்த செல்போன் வைத்திருப்பார்கள்.
5. அவர்களுடன் வருபவர்கள் விலை உயர்ந்த ஆடைகளை உடுத்தி இருப்பார்கள்.
6. பந்தாவாகப் பேசுவார்கள், நடந்துகொள்வார்கள்.
7. மருத்துவர் என்ன சொன்னாலும் கேள்விகள் கேட்காமல், தலையை மட்டும் ஆட்டுவார்கள்.
8. குறிப்பாக “எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, எப்படியாவது காப்பாற்றுங்கள் டாக்டர்” என்று சொல்வார்கள்.
மேலே நான் எழுதியுள்ளவை நகைச்சுவைக்காக மட்டுமல்ல, உண்மையிலேயே சில தனியார் மருத்துவமனைகளில் வசதியுள்ள பணக்கார நோயாளிகளை இனம் காண்பதற்காக சில நபர்களை நியமித்துள்ளார்கள்.
பெரிய கார்களில், ஆடம்பர நகைகள் மற்றும் ஆடைகளுடன் சிகிச்சை பெற வரும் நோயாளிகளை சிறப்பாக கவனித்து வீட்டுக்கு அனுப்புவார்கள் அல்லது மேலே அனுப்புவார்கள்.
ஒரு சிறப்பு ஆடம்பர மருத்துவமனையை நடத்துவதற்கும், அங்கு பணிபுரியும் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கும், ஒவ்வொரு மாதமும் பல லட்சங்கள் முதல் பல கோடிகள் வரையில் தேவைப்படும். அந்த மருத்துவமனையின் அளவையும் வசதிகளையும் பொறுத்து செலவாகும்.
அந்த செலவுகளை ஈடுகட்டுவதற்காக வசதியான நோயாளிகளுக்கு சிறப்பு(?) மருத்துவம் செய்வார்கள். குறிப்பாக இந்த கோவிட் கால கட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக மருத்துவமனைகளுக்கு போதிய வருமானமில்லை. அதனால் சாதாரண நோயாளிகளுக்குக் கூட சிறப்பு வைத்தியங்கள் அல்லது சிறப்பு கோவிட் வைத்தியங்கள் செய்யப்படலாம்.
அதனால் முடிந்த வரையில் மருத்துவம் தேவைப்படாத அளவுக்கு ஆரோக்கியமாக வாழப் பழகிக்கொள்ளுங்கள். ஒரு வேலை மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் உருவானால், உங்களை அடையாளம் தெரியாத மருத்துவமனைக்கு அதுவும் ஒரு ஏழையைப் போன்று சென்று வாருங்கள்.
மருத்துவர் என்ன சொன்னாலும், வீட்டில் கலந்து பேசிவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு; அவருக்குத் தெரியாமல் வேறு மாவட்டத்தில் இருக்கும் இன்னொரு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பின்னர் முடிவுக்கு வாருங்கள்.
இன்றைய கால கட்டத்தில் மருத்துவம் ஒரு வியாபாரம், மருத்துவமனைகள் வியாபார நிறுவனங்கள் என்பதை மனதில் நிறுத்திச் சிந்தித்து முடிவெடுங்கள்.