அனைவருக்கும் தனிமை மட்டுமே நிரந்தரமானது. தனிமை என்பது ஒன்றுமே இல்லாமல் இருப்பதில்லை மாறாக அனைத்துமாக இருப்பது. நான், நீ, அது, இது, விருப்பம், வெறுப்பு, பிடித்தது, பிடிக்காதது, நல்லது, கெட்டது, என்று எந்த பாகுபாடும் இல்லாமல், அனைத்துமாக இருப்பது.
பல்லாயிரம் ஆண்டுகள் தனிமையில் இருந்த ஆன்மா, மனித பிறப்பு எடுக்க விரும்பி மனித கருவறை கிடைத்ததும் அதில் நுழைகிறது. பெண்ணின் கருவறையில் பத்து மாதங்கள் தனிமையில் உடலை வளர்க்கிறது. வளர்ச்சி முழுமை பெற்றதும், சில காலம் இந்த பூமியில் வாழ்கிறது. உலக வாழ்க்கை காலம் முடிவுற்றதும் மீண்டும் ஆன்மா நிலைக்கு அல்லது தனிமைக்குத் திரும்புகிறது.
இந்த உலக வாழ்க்கைக்காக மானுட பெண்மணியின் கருவறை மூலமாகப் பெற்ற உடலை உதறிவிட்டு மீண்டும் தனது ஒளி உடலைப் பெறுகிறது. ஒளி உடலைப் பெற்ற ஆன்மா மீண்டும் தனிமையில் உரைக்கிறது. உடல் இருக்கும் வரையில் தன்னை அந்நியமாக, உடலுடன் இணைத்துப் பார்த்த அந்த ஆன்மா, உடலைத் துறந்ததும் தனக்கு எல்லை கிடையாது, தான் ஒரு சிறு உடல் அல்ல என்பதை உணர்கிறது.
கடலில் விழுந்த ஒரு மழைத்துளி கடலுடன் கலப்பதைப் போன்று, அந்த ஆன்மா முழு பிரபஞ்சத்துடன் கலக்கிறது. தனித்திருத்தல் என்பது முழுமையான ஒரு இருப்பு. பலகோடி மழைத் துளிகள் சேர்ந்து கடலானதைப் போன்றது. கடல் தனியாக இருப்பதாக எண்ணினாலும் அது அனைத்தையும் தன்னகத்தே இணைத்துக்கொள்ளும் முழுமைபெற்ற தனிமையாக இருக்கிறது.
தியான நிலையிலும், ஆன்மீக விழிப்புணர்வு பெறும்போதும், மனிதர்கள் தனிமையில் இருந்தாலும், கடலை போன்று அனைத்தையும் தன்னுள்ளே இணைத்துக்கொண்ட முழுமைபெற்ற தனிமையாகத் தான் இருக்கிறார்கள்.
Leave feedback about this