தங்கத்தில் முதலீடு ஆலோசனைகள். அதிகச் செல்வமும் வருமானமும் உள்ளவர்கள், நிலம் மற்றும் சொத்துக்கள் வாங்குவதில் முதலீடு செய்கிறார்கள். சிறிதளவு பணமும் குறைந்த வருமானமும் உடைய நடுத்தர வர்க்கத்தினர் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள்.
இன்று வாங்கும் தங்கம் அவசரக் காலங்களிலும் முதுமைக் காலங்களிலும் உதவும் என்ற நோக்கத்தில் தான் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் தங்கம் வாங்குவதை ஒரு முதலீடாக பார்க்கிறார்கள். ஆனால் இதில் வருத்தமான ஒரு விஷயம் என்னவென்றால் தங்கம் வாங்கும் போதே செய்கூலி, சேதாரம், அரசாங்க வரி என்று பல வகைகளில் சுரண்டப்பட்டு நாற்பது விழுக்காடு வரையில் நஷ்டத்தில் தான் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் தங்கம் வாங்குகிறார்கள். இதில் தங்கத்தில் கலப்படம் செய்யும் கடைகளும், தவறான கணக்கைக் காட்டி வாடிக்கையாளர்களை ஏமாற்றும் கடைகளும் இருக்கின்றன.
இதில் குறிப்பிட வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நம்பிக்கையான நிறுவனம், பெரிய நிறுவனம் என்று மக்களால் நம்பப்படும் நிறுவனங்களும் மக்களை ஏமாற்றும் வேலையில் ஈடுபடுகின்றன. பொருட்களை வாங்கும் மக்கள்தான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
முதலீட்டுக்காக தங்கம் வாங்குபவர்கள் முடிந்தவரையில் ஆபரண நகைகளாக வாங்காமல், தங்கக் காசு அல்லது தங்கக் கட்டிகளாக வாங்கலாம். தங்கக் காசுகள் அல்லது தங்கக் கட்டிகள் வாங்கும் போது பெரும்பாலும் செய்கூலி மற்றும் சேதாரம் இருக்காது. தங்கத்துக்கான பணம் மட்டும் செலுத்தினால் போதும்.
தங்க நாணயங்கள் ஒரு கிராம் இடையில் கூடக் கிடைப்பதனால் அதிகப் பணம் உள்ளவர்கள் தான் தங்க நாணயங்கள் அல்லது தங்கக் கட்டிகள் வாங்க முடியும் என்ற நிலை இல்லை. சிறிய முதலீடு உள்ளவர்கள் கூட ஒரு கிராம், ஐந்து கிராம் தங்க நாணயங்களை முதலீடாக வாங்கலாம்.
ஆபரண நகைகளுக்கு செய்கூலி சேதாரம் உண்டு, தங்கக் காசு மற்றும் தங்கக் கட்டிகளுக்கு செய்கூலி சேதாரம் கிடையாது. சில இடங்களில் அரசாங்க வரிகள் கூடக் கிடையாது. நீங்கள் வாங்கும் தங்கம், ஆபரணமா? அல்லது முதலீடா? என்பதைச் சிந்தித்து முடிவு செய்து பொருத்தமான வடிவில் தங்கத்தை வாங்குங்கள்.
Leave feedback about this