தங்கம் ஒரு சிறந்த நிலையான மூலதனம். மனிதர்களின் நாகரிகம் வளர தொடங்கிய காலம் முதலாக, மனிதர்கள் தங்களை அலங்காரம் செய்து கொள்ள வேண்டும், தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும், பிறர் தன்னை மதிக்க வேண்டும் என்று சிந்திக்க தொடங்கிய காலம் முதலாக; தங்கம் மனித வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கம் வகிக்க தொடங்கிவிட்டது.
தங்கம் அலங்காரப் பொருளாக மட்டுமே இல்லாமல், வியாபாரத்தில் பரிவர்த்தனை பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. பொருளுக்குப் பொருள் என்ற பண்டமாற்று முறை மறைந்து தங்கத்தை கொண்டும், வெள்ளியைக் கொண்டும் பொருட்களின் மதிப்பை நிர்ணயிக்க தொடங்கினார்கள்.
முக்காலத்தில் தங்கத்தின் மதிப்பைக் கொண்டும், தங்க நாணயத்தின் மதிப்பைக் கொண்டும் பொருட்களின் விலையும் மதிப்பும் நிர்ணயிக்கப் பட்டன. இன்றைய காலத்தில் பொருட்களின் மதிப்பை நிர்ணயிக்க பணம் பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும் அந்த பணத்தின் மதிப்பை நிர்ணயிக்க தங்கம் பயன்படுத்தப்படுகிறது.
வரலாற்றில் பெரும்பாலான போர்கள் பல்வேறு காரணங்களுக்காக நடத்தப்பட்டாலும் அவற்றின் முடிவுகள் எதிரி நாட்டின் தங்கத்தைக் கொள்ளை அடிப்பதாகவே இருந்துள்ளன. தங்கத்தைக் கொள்ளை அடிப்பதற்காகக் கூட பல போர்கள் நடந்துள்ளன. மேற்கத்திய நாடுகளின் இன்றைய வளர்ச்சியும் வளமையும் பெரும்பாலும் கீழ்த் திசை நாடுகளில் கொள்ளையடித்த தங்கத்திலிருந்து உருவானவையே. ஆப்பிரிக்கா, இந்தியா, மற்றும் மற்ற ஆசிய நாடுகளில் போர் என்ற பெயரில் கொள்ளையடிக்கப்பட்ட பல “டன்” எடையுடைய தங்கத்தின் கையிருப்பு, அடிமைப்படுத்திய நாடுகளிடம் இன்றும் உள்ளன.
மேலே உள்ள தகவல்களை கொண்டு தங்கம் எவ்வளவு மதிப்புடைய பொருள் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். மனித நாகரீகம் தொடங்கிய காலம் முதலாக தங்கம் மனிதர்களின் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக திகழ்கிறது. எந்த காலத்திலும் தங்கம் மட்டும் தன் மதிப்பை இழந்ததில்லை.
Leave feedback about this