தங்க நகைகளை வாங்குவோருக்கு ஆலோசனைகள். தங்கம் மற்றும் தங்க நகைகளை வாங்கும் போது பெரும்பாலும் அலங்காரப் பொருளாக மட்டுமல்லாமல் எதிர்காலச் சேமிப்பாகவும் பலர் வாங்குகிறார்கள். சேமிப்பாக வாங்கும் தங்கமும் நகைகளும் எதிர்காலத்தில் இலாபம் கொடுக்க சில டிப்ஸ்.
1. விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு நகைகளை வாங்காதீர்கள். ஆசையிலும் அவசரத்திலும் நிதானம் இழந்து விடுவீர்கள்.
2. கற்கள் பதிக்கப்பட்ட நகைகளை வாங்காதீர்கள். நகையில் பதிக்கப்படும் கற்களுக்கு பெரும்பாலும் மதிப்பு இருப்பதில்லை, ஆனால் தங்கத்தின் விலையைக் கொடுத்து அந்த கண்ணாடி அல்லது மதிப்பில்லாத கல்லை வாங்க நேரிடும்.
3. கற்கள் பதிக்கப்பட்ட நகைகளை விற்க நேரிட்டால், கற்களை நீக்கிவிட்டு தங்கத்துக்கு மட்டுமே விலை கொடுப்பார்கள்.
4. கடன் வாங்கி நகைகளை வாங்காதீர்கள். கடனைக் கட்டமுடியாமல் போனால் அந்த நகையை நஷ்டத்துக்கு விற்க நேரிடும்.
5. தேவையில்லாமல் நகைகளை வாங்காதீர்கள். தேவையில்லாமல் நகை வாங்கினால் அவசரக் காலத்தில் பணம் இல்லாமல் நகையை நஷ்டத்துக்கு விற்க நேரிடும்.
6. சேமிப்புக்காக தங்கம் வாங்குபவர்கள் முடிந்தவரையில் அலங்கார ஆபரணமாக வாங்காதீர்கள். தங்கக் கட்டி அல்லது தங்கக் காசாக வாங்குங்கள். தங்கக் கட்டி மற்றும் தங்கக் காசுக்கு செய்கூலி மற்றும் சேதாரம் இருக்காது.
7. செய்கூலி மற்றும் சேதாரம் இல்லாத அல்லது செய்கூலி மற்றும் சேதாரம் குறைவாக உள்ள கடைகளில் நகைகளை வாங்குங்கள். வாங்கும் போதே பணத்தை மிச்சப்படுத்தலாம்.
8. சேமிப்புக்காக தங்கம் வாங்குபவர்கள், வங்கிகளில் ஏலம் விடப்படும் நகைகளை வாங்கலாம். சில நேரம் அவற்றில் போலி நகைகள் இருக்கக்கூடும் கவனமாக இருக்க வேண்டும்.
9. தங்கத்தில் சம்பாதிக்க விரும்புபவர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் விற்பனை செய்யும் பழைய நகைகளை வாங்கலாம். செய்கூலி, சேதாரம், மற்றும் அரசாங்க வரி மிச்சமாகும். மேலும் பழைய நகை என்பதனால் விலையும் சந்தை மதிப்பைவிடவும் சற்று குறைவாக இருக்கும்.
10. நமது குடும்பத் தேவைக்குப் போக மீதமுள்ள பணத்தில் தான் தங்கம் வாங்க வேண்டும். மாதச் செலவுக்குத் தேவைப்படும் பணத்தில் தங்கம் வாங்கினால் பின்னாளில் அதை அடகு வைக்கவோ, விற்கவோ நேரிடலாம்.
11. எந்த காரணத்தைக் கொண்டும் நகைகளை அடகு வைக்கத் தொடங்காதீர்கள், பணம் தேவைப்பட்டால் நகைகளை அடகு வைத்துக் கொள்ளலாம் என்று அலட்சியப் போக்கு உருவாகிவிடும். அடகு வைத்த நகைகளுக்கு வட்டி கட்டியே வருமானம் வீணாகும்.
12. தங்கமும் நகைகளும் ஆடம்பரமல்ல அவை சேமிப்பு என்ற தெளிவு இருக்க வேண்டும். அவற்றை மற்றவர்களிடம் பகட்டுக்காக காட்டும் பழக்கம் இருக்கக் கூடாது.
13. இந்த கட்டுரையை வாசிப்பவர்கள் ஒரு கிராமாக இருந்தாலும் பரவாயில்லை, தங்கக்காசு ஒன்றை வாங்கி உங்கள் பணம் வைக்கும் அல்லது மதிப்புடைய பொருட்களை வைக்கும் இடத்தில் வையுங்கள். செல்வம் சேர தொடங்கும்.
லட்சுமி கடாட்சம் பெருகி, வாழ்க வளத்துடன்.