பொருளாதாரம்

தங்க நகைகளை அடகு வைக்காதீர்கள்

தங்க நகைகளை அடகு வைக்காதீர்கள். ஆத்திர அவசர நேரங்களில் தங்க நகைகளை அடகு வைப்பது இப்போது சகஜமாக நடக்கும் ஒரு விசயம், ஆனாலும் இது முடிந்தவரையில் தவிர்க்க வேண்டியது.

தவிர்க்க முடியாத ஆபத்து அவசரக் காலங்களில் நகைகளை அடகு வைத்தும், மற்ற பொருட்களை அடகு வைத்தும், கடன் வாங்கியும், செலவு செய்வதை தவறு என்று சொல்ல முடியாது. அனைத்தையும் விட உயிர் விலை மதிப்பற்றது.

ஆனாலும் இந்த பழக்கம் தொடர்ந்தால் நாளடைவில் பணம் தேவைப்பட்டால் அடகு வைத்துக் கொள்ளலாம் என்ற மன நிலைக்குக் கொண்டு வந்து விட்டுவிடும். முடிவில் எதற்கெடுத்தாலும் அடகு வைப்பதும் வட்டி கட்டுவதும் பழக்கமாகிவிடும்.

தங்க நகைகளை அடகு வைத்தால் பணம் இருக்கும் போது திருப்பிக் கொள்ளலாம் என்ற அலட்சியப் போக்கு பலருக்கு உருவாகிவிடுகிறது. ஆபத்து அவசரக் காலங்களில் அடகு வைக்க தொடங்கி பின்பு, பண்டிகை, கொண்டாட்டம், துணிமணிகள் வாங்க, சுற்றுலா செல்ல என்று நீள்கிறது.

பணம் தேவைப்பட்டால் தங்க நகைகளை அடகு வைத்துக் கொள்ளலாம் என்ற அலட்சியப் போக்கு, அவசர காலங்களில் உடனடியாக எவ்வாறு பணம் புரட்டுவது என்பதை சிந்திக்க விடாமல் செய்வதுடன்; குறுக்கு வழியில் உடனடியாக பணம் திரட்ட நகைகளை அடகு வைக்கலாம் என்ற எண்ணத்தை உருவாக்கி விடுகிறது. அடகு வைக்கும் பழக்கத்தினால் தேவையில்லாமல் வட்டி என்ற பெயரில் பணம் செலவாகிறது. அடகு, வட்டி, கடன் என்று தொடர்ந்து அனாவசிய செலவுகள் அதிகரித்து கடனை அதிகரிக்கும், செல்வத்தைப் பாழாக்கும்.

முடிந்த வரையில் கடன் வாங்காமல் அடகு வைக்காமல் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளப் பழக வேண்டும். தேவைகளையும் ஆசைகளையும் சுருக்கி செலவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

செல்வம் சேர்க்க பல வழிமுறைகள் உள்ளன அவற்றில் ஒன்று வருமானத்தை அதிகரிப்பது. இப்போது நமக்கு என்ன வருமானம் வருகிறதோ அதைத் தவிர்த்து புதிய வருமானம் வருவதற்கு வழி தேட வேண்டும். மற்றொரு வழிமுறை செலவுகளை குறைப்பது. தற்போதைய வருமானத்தை அதிகரிக்க முடியாமல் போனாலும், தற்போது செய்யும் செலவுகளை குறைத்தாலே வரும் வருமானத்தில் ஒரு பகுதியை மிச்சப்படுத்த முடியும்.

அடகு வைக்காமல், கடன் வாங்காமல், வரும் வருமானத்தைக் கொண்டு செலவு செய்யத் தொடங்கினாலே, நாளடைவில் அதிலிருந்தும் மிச்சப்படுத்தும் ஆற்றல் தானாக உருவாகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X