வாழ்க்கை

தலைவிதி என்பது என்ன?

person sitting while reading book faith

தலைவிதி என்பது என்ன? மனிதர்களின் வாழ்க்கையில் ஏதாவது எதிர்பாராத சம்பவம் நடந்து விட்டாலோ, தன் புரிதலுக்கு மீறிய விசயம் நடந்து விட்டாலோ, தவறான கணவன் மனைவி அமைந்து விட்டாலோ, பிள்ளைகள் தவறான செயல்களைச் செய்து விட்டாலோ, பிடிக்காத விசயம் ஏதாவது நடந்து விட்டாலோ அல்லது குணப்படுத்தத் தெரியாத நோய்கள் உருவாகி விட்டாலோ, அதை தலைவிதி என்று சொல்லி ஏற்றுக் கொள்ளும் வழக்கம் மக்களிடத்தில் இருக்கிறது. விதி, தலைவிதி, தலையெழுத்து இப்படி எதையாவது கூறி மனதை சமாதானப் படுத்திக் கொள்வார்கள். உண்மையில் விதி என்பது என்ன?

தலைநகரம் என்று அழைக்கிறோமே அது என்ன நம் தலைக்கு மேலா இருக்கிறது? தலைமகன் என்று அழைக்கிறோமே அவன் என்ன தலைக்கு மேலா இருக்கிறான்?, அல்லது தலையால் பிறந்தானா? இல்லையல்லவா, அதைப்போல் தான் தலையெழுத்து என்பதும் மனிதனின் தலையில் எழுதப்பட்ட எழுத்து அல்ல. தலைநகரம், தலைமகன், தலைமை, தலைவன் போன்ற வார்த்தைகளில் வரும் தலை என்ற சொல், முதல், முதன்மை என்ற அர்த்தத்தைத்தான் குறிக்கிறது.

அதைப்போல் தலையெழுத்து என்பதையும் முதன்மையான எழுத்து என்பதைத்தான் குறிக்கிறது. தலையெழுத்து என்பது மனிதன் பிறக்கும் முன் எழுதப்பட்ட முதல் எழுத்து அல்லது முதல் விதி என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.

மனிதர்கள் கண்டு நடுங்கும், பலர் ஏமாற்றப் பயன்படுத்தும் சொல், பலர் ஏமாறக் காரணமாக இருக்கும் சொல் – விதி. விதி என்ற சொல்லை நாம் எங்கெல்லாம் பயன்படுத்துகிறோம் என்று பார்த்தால். சாலை விதி, பிரபஞ்ச விதி, ஈர்ப்புவிதி, ஆகமவிதி, இப்படி பல இடங்களில் விதி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். இப்போது சொல்லுங்கள் விதி என்பது என்ன?

விதி என்ற சொல் சட்டம் என்றுதானே பொருள் தருகிறது. ஆம், “விதி” என்றாலும் “தலை எழுத்து” என்றாலும், “தலை விதி” என்றாலும் ஒரே அர்த்தம் தான். நாம் தான் பயத்தால் தவறாகப் பொருள் கொள்கிறோம். விதி, தலைவிதி, தலையெழுத்து இந்த மூன்று சொல்லுக்கும் முதலில் உண்டான சட்டம் என்றுதான் அர்த்தம்.

மனிதன் எவ்வாறு வாழ வேண்டும். மனித இனம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று இயற்கையின் சட்டம் ஒன்று உள்ளது, அதைத்தான் இந்த விதி என்ற சொல் குறிக்கிறது. மற்றபடி ஒவ்வொரு மனிதனின் தலையிலும் கடவுள் எதையாவது எழுதி வைத்திருப்பார் என்பது பேதைமை அன்றி வேறில்லை. கடவுள் எந்த மனிதனின் வாழ்க்கையிலும் குறுக்கிடமாட்டார். மனிதர்கள் தானாக எதையாவது கற்பனை செய்துகொண்டு இறைவனின் மீது பழியைப் போடுகிறார்கள்.

விதிக்கு சில உதாரணங்கள் சொல்கிறேன். மிளகாய் காரமாக இருக்கும், தேன் இனிக்கும், உப்புக் கரிக்கும், பற்கள் கூர்மையாக இருக்கும் விலங்குகள் மாமிசம் உண்ணும், பற்கள் தட்டையாக இருக்கும் விலங்குகள் தாவரங்களை உண்ணும், மீன்கள் நீரில் வாழும், விலங்குகள் தரையில் வாழும், பறவைகள் பறக்கும். இவ்வாறான பல இயற்கையின் படைப்பு விதிகள் இருக்கின்றன.

பல வகை நீரையும் மனிதன் பயன்படுத்தலாம் ஆனால் கடல் நீரைப் பயன்படுத்த முடியாது. சில தாவரங்களை மனிதன் உண்ணலாம் ஆனால் சிலவற்றை உண்ணக்கூடாது. இந்த உலகில் சில வேலைகளை மனிதன் செய்யலாம் ஆனால் சிலவற்றைச் செய்ய முடியாது. இப்படி பல கட்டுப்பாட்டு விதிகள் உள்ளன.

மனிதனுக்கு தன் உடலிலேயே, உள்ளுறுப்புகளின் மேல் அவனுக்கு எந்த ஆளுமையும் கிடையாது. மனிதனால் உள்ளுறுப்புகளைக் கட்டுப்படுத்த முடியாது. உடலின் வெளி உறுப்புகளின் மீது கூட அவனுக்கு முழுக் கட்டுப்பாடும் கிடையாது.

இவ்வாறு பல கட்டுப்பாட்டு விதிகள் மனிதர்களுக்கும் உலகில் வாழும் மற்ற உயிரினங்களுக்கும் விதிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைத்தான் நம் முன்னோர்கள் விதி (சட்டம்) என்று அழைத்தார்கள். இப்படி இயற்கை விதித்த சட்டங்களை மீறுவதுதான் மனிதனின் அனைத்துத் துன்பங்களுக்கும் தொந்தரவுகளுக்கும் காரணமாக இருக்கிறது.

மற்றபடி மனிதன் முயற்சி செய்தால் பெரும்பாலான துன்பங்களில் இருந்து விடுபட்டு விடலாம். அதனால் எதைக் கண்டும் தலைவிதி என்று சோர்ந்து விடாமல், முயற்சி செய்து வெற்றிப் பெறுங்கள்.

1 Comment

  • சிவபிரியா August 16, 2024

    தலையெழுத்து என்பது முன் ஜென்மத்தின் தொடர்ச்சியாக பிறப்பிற்க்கான காரணம் அந்த பிறப்பின் காரணம் எதன் படி நடந்தேறும் என்பது தலைவிதி ஆகிறது. அப்படி தலைவிதியை மதியால் வெள்ளலாம் என்பது , தலையெழுத்தை புரிந்து ஏற்றுக் கொண்டு சந்தோஷமாக வாழ கற்றுக் கொண்டால் விதியை மதியால் வெள்ளலாம் என்பதற்கு ஏற்ப தங்கள் கட்டுரை இருந்தது நன்றி ஐயா சிறப்பு 🙏🏼

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *