தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பு. முன்பு எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு தற்போது தமிழர்களின் மீது இந்தி திணிக்கப்படுகிறது, பல்வேறு துறைகளில் இந்தி கட்டாயமாக்கப்படுகிறது. ஆரியத் திராவிட போர்களும் சண்டைகளும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் கூட, அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட தமிழர்களின் மீது மாற்று மொழிகள் திணிக்கப்படவில்லை. அதாவது தமிழர்கள் சமஸ்கிருதமோ, வட மொழியோ, கற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தப் படவில்லை. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிற்கு பிறகுதான் தமிழ்நாட்டில் வேற்று மொழிகள் தமிழர்களின் மீது திணிக்கப்படுகின்றன. கால காலமாக ஆரியர்கள் உலகம் முழுவதும் நடத்திவரும் கலாச்சார அழிப்பு தான் இது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு இந்தோ ஆரிய இனம், வறுமையின் காரணமாக பஞ்சம் பிழைக்க உலகம் முழுக்க சென்றது. நாடோடிகளான அந்த இனம் அவர்கள் பஞ்சம் பிழைக்க அண்டிய பகுதிகளில் வாழும் மக்களின் பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை அழித்து தங்களின் நம்பிக்கைகளையும் கலாச்சாரத்தையும் அவர்களின் மீது திணித்தது. இந்த விவரத்தை எழுதிக்கொண்டு போனால் கட்டுரை திசை மாறிவிடும் இதோடு நிற்கிறேன்…
இப்போது நம்மிடையே புழக்கத்தில் இருக்கும் ஜாதி, மதம், சடங்கு, சம்பிரதாயம், யாகம் போன்றவை அவர்கள் நம்மீது திணித்தவை தான். இந்தி மொழியும் சமஸ்கிருத மொழியும், மதம் – இனம் – கலாச்சாரம் வாரியாக தமிழர்களின் மீது திணிக்கப்படுகிறது என்றால், இந்த மொழித் திணிப்பு ஆயிரம் ஆண்டுக்கு முன்பாகவே நடந்திருக்க வேண்டும்.
தற்போது தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பு மிகவும் மும்முரமாக நடத்தப்பட்டு வருகிறது. பணம், செல்வாக்கு மற்றும் அரசியல் ஆதாயத்துக்காக சில வலதுசாரிகளும், பார்ப்பனர்களும், சில சூத்திரர்களும், மொழித் திணிப்புக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
இந்தியாவில் இருக்கும் அத்தனை இனங்களை, மாநிலங்களைக் காட்டிலும் தமிழர்களும் தமிழ்நாடும் முன்னேறி இருப்பதற்குக் காரணம் தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், மற்றும் புத்திக் கூர்மை. தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், மற்றும் புத்திக் கூர்மைக்குக் காரணம் அவர்களின் மொழி, அந்த மொழி கொடுக்கும் பல்லாயிரம் ஆண்டுகளாக பாதுகாத்த அறிவு. தமிழர்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் அவர்களின் மொழியை முதலில் அளிக்க வேண்டும்.
இன்று உலகம் முழுமைக்கும் பல்வேறு நாடுகளில், இந்தியாவில் கூட பல்வேறு மாநிலங்களில்; சில இன மக்களுக்கு தங்களின் கலாச்சாரம், பண்பாடு, இலக்கியம், நம்பிக்கைகள், இனத்தின் தொன்மை வரலாறு போன்றவை தெரியாது; காரணம் அவர்களுக்கு அவர்களின் தாய் மொழி தெரியாது.
உதாரணத்துக்கு: நம் மக்களில் பலரும் பழமொழி, திருக்குறள், ஆத்திசூடி, திருமந்திரம், திருவாசகம், போன்றவற்றை மேற்கோள் காட்டி பேசுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். காரணம் அவர்களுக்கு தங்களின் தாய் மொழி தெரியும், அதனை வாசிக்கவும் எழுதவும் அவர்களுக்குத் தெரியும்.
நம் மக்களுக்கு தமிழ் வாசிக்கத் தெரியாமல் போனால் இவற்றுக்கெல்லாம் வாய்ப்பில்லை அல்லவா? இன்று கூட ஆங்கில மொழி வாரியாக கல்வி கற்ற பலரும் எனக்கு தமிழ் பேசத் தெரியும் ஆனால் எழுதப் படிக்க தெரியாது என்று கூறுவதை நாம் கேள்விப் பட்டிருப்போம். தமிழ் மக்களுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாமல் போனால் நமது ஐம்பெரும் காப்பியங்களும், இதிகாசங்களும், கலாச்சாரமும், பண்பாடும், புத்திக் கூர்மையும், தானாக அழிந்துவிடும் அல்லவா?
மொழித் திணிப்பு என்பது மொழி அழிப்பு, ஒரு இனத்தையும் அந்த இனத்தின் தொன்மையையும் கலாச்சாரத்தையும் அறிவையும் பண்பாட்டையும் அழிப்பதற்கான பெரும் முயற்சி.
இந்தித் திணிப்பு என்பதை இன்னொரு மொழியை கற்றுக்கொள்ள சொல்கிறார்கள் என்று சாதாரணமாக கடந்துசெல்ல முடியாது. நமது மொழியையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அழிக்க முயல்கிறார்கள் என்பதைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.