பொது

தமிழகத்தின் தண்ணீர் பஞ்சமும் தீர்வும்

Photo of Brown Bare Tree on Brown Surface during Daytime

“மாடுகட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனைகட்டி போரடித்த அழகான தென்மதுரை” என்று சொல்லும் அளவிற்கு விவசாயத்தில் செழித்து விளங்கிய தமிழகத்தில் தற்போது தண்ணீர்ப் பஞ்சம் உண்டானது ஏன்? வெகுநாட்களாக என் மனதில் இந்தக் கேள்வியும், இதற்கு விடை கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆவலும் இருந்து வந்தது.

அண்மையில் தமிழகத்திற்கு சென்றிருந்த போது அங்கு 50 வயதுக்கும் மேற்பட்ட சில உறவினர்களைச் சந்தித்து, அவர்களின் இளம் வயதில் உண்டான தண்ணீர் தட்டுப்பாட்டைப் பற்றி விசாரித்தேன்

அவர்களிடம் நான் கேட்ட கேள்விகள்

  1. நீங்கள் சிறுவர்களாக இருந்தபோது தற்போது இருப்பதைப் போன்று கருவேல மரங்கள் இருந்தனவா?
  2. உங்கள் ஊரில் ஆறு, குளம், நீர் ஊற்று, போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் இருந்தனவா?
  3. பருவம் தவறாமல் மழை பெய்ததா?
  4. நீங்கள் சிறுவர்களாக இருந்தபோது தண்ணீர்ப் பஞ்சம் இருந்ததா?
  5. இப்போது இருப்பதைப் போன்று நீர்ப் பஞ்சமும், வறட்சியும், உஷ்ணமும், இருந்ததா?

என் கேள்விகளுக்கு அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான பதில்களைத் தான் கூறினார்கள்.

நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது இப்போது இருப்பதை விடவும் அதிகமான கருவேல மரங்கள் இருந்தன. பருவம் தவறாமல் மழை பெய்தது. நீர்நிலைகளில் எப்போதுமே தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். தற்போது இருப்பதைப் போன்று நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டதில்லை. இப்போது இருப்பதைப் போன்று உஷ்ணமோ வறட்சியோ இருந்ததில்லை.

அவர்கள் கூறிய பதில்களை வைத்துப் பார்க்கும் பொழுது கருவேல மரங்களுக்கும் தற்போது ஏற்பட்டிருக்கும் வறட்சிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்பது தெளிவாகத் தெரிகிறது. தற்போது இருப்பதை விட அதிகமான கருவேல மரங்களில் இருந்து வறட்சி ஏற்பட்டதில்லை, பருவம் தவறாமல் மழையும் பெய்திருக்கிறது. தற்போது ஏற்பட்டிருக்கும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கும், பருவம் தவறிய மழைக்கும், வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. உண்மையான காரணங்களை மறைப்பதற்காக யாரோ கருவேல மரங்களின் மீது மக்களின் பார்வையைத் திருப்பி விட்டிருக்கிறார்கள்.

தற்போது ஏற்பட்டிருக்கும் தண்ணீர்ப் பஞ்சத்திற்கு, வறட்சிக்கும் அடிப்படை காரணமாக இருக்கக் கூடிய விஷயங்கள்.

  1. குளங்களை முடியாது
  2. ஆற்றில் மணல் அள்ளுவது
  3. நிலத்தடி நீரை உறிஞ்சுவது
  4. காடுகளை அழிப்பது
  5. மலைப் பகுதிகளை அழிப்பது

குளங்களை அழிப்பதினாலும், நிலத்தடி நீரை உறிஞ்சுவதாலும் நிலத்தடி நீரின் மட்டம் குறைகிறது. மண்ணின் செழிப்பு தன்மையும் கெடுகிறது. காடு மற்றும் மலைகளை அழிப்பதனால் காற்றில் இருக்கும் ஈரத்தன்மை நீராக மாறாமல் போகிறது. மண்ணின் ஈரமும், வளமும் கெடுகிறது. பருவம் தவறாமல் மழை பெய்வதற்கு மண்ணின் செழுமை மிகவும் அவசியமானது. ஆனால் நம்மிடம் மரம்தான் முக்கியம் என்று சொல்வார்கள். மரமும் முக்கியம்தான் மரத்தைவிடவும் மண் ஆரோக்கியமாகவும், வளமாகவும், செழிப்பாகவும் இருந்தால்தான் அந்த மண்ணிலிருந்து உருவாகும் வாயுக்கள் மேகத்தில் நீராகத் தேங்கி மழையாகப் பொழியும்.

ஆற்று மணல் திருடுபவர்கள் திட்டமிட்டு பிற மாநிலங்களில் இருந்து நமக்கு வரவேண்டிய ஆற்று நீரை வரவிடாமல் தடுக்கிறார்கள். திட்டமிட்டு மொழி பிரச்சனைகளை உண்டாக்குகிறார்கள். இதற்குக் காரணம் ஆற்றில் தண்ணீர் வந்தால் அவர்களால் மணல் திருட முடியாது. இதில் பல மாநிலங்களின் அரசியல்வாதிகளுக்கும் பங்குண்டு. ஆற்று மணலை அள்ளுவதால் ஆற்றில் நீர் இல்லாமல் வறண்டு, மண்ணில் கனிம வளம் குறைகிறது. ஆற்றில் மட்டுமின்றி அந்த ஆறு பயணிக்கும் நிலங்கள் முழுவதிலும் மண்ணின் கனிமமும், வீரியமும், ஆரோக்கியமும் பாதிப்படைகிறது.

ஒன்றை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள் தண்ணீரை பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ணுவது முட்டாள்தனம். அதைப்போல் நீர் வானத்திலிருந்து பொழிய வேண்டும். பூமியிலிருந்து உறிஞ்சக் கூடாது. அனைத்துத் தரப்பு மக்களும் விழித்துக்கொண்டு இந்தப் பிரச்சனைக்கு உடனடியாக ஒரு தீர்வை காண வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாடு பாலைவனமாவதை யாராலும் தடுக்க முடியாது. இந்தப் பிரச்சனையில் நமக்கு ஏன் வம்பு என்று இருக்கும் அத்தனை பேரும் குற்றவாளிகளே.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து கொள்ளலாம் என்று எண்ணாதீர்கள். தண்ணீர் பிரச்சனைக்கு இன்று ஒரு தீர்வை காண வேண்டும்.