சுயத்தை அறிந்துகொள்வது எப்படி? குறிப்பிட்ட வயதைத் தாண்டியதும் பெரும்பாலானோரின் மனதில் தோன்றும் கேள்விகள், நான் யார்? நான் ஏன் பிறந்தேன்? நான் ஏன் இந்த மனிதப் பிறவி எடுத்தேன்? நான் எங்கிருந்து இந்த உலகிற்கு வந்தேன்? என்னைப் படைத்தது யார்? இந்த பிறப்புக்கு முன்பாக நான் எங்கு இருந்தேன்? மரணத்திற்குப் பின்பாக என்ன நடக்க போகிறது? இக்கேள்விகளுக்கு தர்க்க ரீதியாக, மத ரீதியாக, பகுத்தறிவு ரீதியாக, என்று பல பதில்களைக் கூறலாம். யார் எந்த பதிலைக் கூறினாலும் எனக்குப் பிடித்த பதில், “நான் மனிதனாக வாழ்ந்து, மனிதப் பிறவி என்றால் என்னவென்று அனுபவம் செய்வதற்காகப் பிறந்தேன்”.
நீ மனிதன் அல்ல, நீ உன் உடல் அல்ல, நீ மனமும் அல்ல, நீ ஓர் ஆத்மா, நீ அது, நீ இது, என்று ஆளாளுக்கு ஒரு கருத்தைச் சொல்வார்கள், அது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் அந்த உண்மை அவற்றை உண்மையாக உணர்ந்து கொண்டவர்களுக்குத் தான், அனைவருக்கும் அல்ல. உங்களைப் பொறுத்த வரையில் உங்கள் அனுபவத்துக்கும் அறிவுக்கும் எட்டியவரை நீங்கள் ஒரு மனிதர். இது மட்டும் உறுதியாக தெரியும், இதற்கு மேல் என்னவெல்லாம் நீங்கள் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அவை பெரும்பாலும் உங்களின் சொந்த அனுபவங்களாக அல்லாமல் மற்றவர்களால் உங்களுக்குள் திணிக்கப் பட்டவையாக இருக்கின்றன.
ஆன்மீகத்தில் வளர்வதற்கும், தன்னை அறிந்து கொள்வதற்கும் முதல் அடிப்படைத் தகுதி எனக்குத் தெரியாது என்று உணர்ந்து ஒப்புக் கொள்வதுதான். யாரெல்லாம் தன் மனதில் தன்னைப் பற்றிய முன் முடிவோடு இருக்கிறார்களோ அவர்கள் ஆறாய் ஓடி கடலை அடைய முடியாமல், குட்டையாய் தேங்கிவிடுவார்கள். மனிதப் பிறப்பைப் பற்றி மற்றவர் சொன்னவை, புத்தகத்தில் வாசித்தவை என அனைத்தையும் மறந்துவிட்டு, மனதை வெற்று காகிதமாக வைத்துக் கொள்ள வேண்டும். காலம் அதில் அழகிய ஓவியங்களை வரையும். வெறும் கோப்பையுடன் காத்திருங்கள், காலம் அதில் சுவையான தேநீரை ஊற்றும்.
ஆன்ம வளர்ச்சிக்கு மிக முக்கியமான தகுதியே, காத்திருப்பதுதான். காத்திருங்கள், வெற்று காகிதத்தோடும், வெற்று கோப்பையோடும். நேரம் கனியும் போது இயற்கை அவற்றை நிரப்பிவிடும்.