தரமான, சந்தை மதிப்புடைய கிரிப்டோ நாணயங்களை வாங்குவது எப்படி? கிரிப்டோ நாணயத்தை வெளியிடும் நிறுவனங்கள் என்று தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் இணையதளங்களில் இருந்தும், அந்த இணையதளங்களின் இடைத் தரகர்கள் மூலமாகவும் கிரிப்டோ நாணயங்களை வாங்கி பலர் ஏமாந்து இருக்கிறார்கள்.
கவர்ச்சியான விளம்பரம், ஆசை வார்த்தைகள், பொய்யான தகவல்கள், பொய்யான வாக்குறுதிகள், பொய்யான எதிர்காலத் திட்டங்கள், அதிக வட்டி, பரிசுகள், இலவசங்கள், இவைதான் அவ்வாறான இணையதளங்களில் முதலீடுகள்.
கிரிப்டோ நாணயங்களை வெளியிடுவதற்கான மென்பொருள் அல்லது மைனிங் ஸ்கிரிப்ட் கொட்கள் (crypto mining codes) அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஓபன் சோர்ஸ் (open source) முறையில் எழுதப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இருக்கின்றன. பிட்காயினை வெளியிட்டதாக நம்பப்படும் சதோஷி நக்கமோட்டோ (Satoshi Nakamoto) கூட தனது பிட்காயின் உருவாக்கும் மென்பொருளை ஓபன் சோர்ஸ் முறையில் பொதுமக்களுக்கு வெளியிட்டிருக்கிறார், அவற்றைக் கொண்டு தான் இன்றும் புதிய பிட்காயின்கள் வெளியிடப்படுகின்றன.
இலவசமாக ஓபன் சோர்ஸ் முறையில் கிடைப்பதனால், மென்பொருள் எழுதத் தெரிந்த யார் வேண்டுமானாலும், புதிய கிரிப்டோ நாணயத்தை வெளியிடலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனால் அந்த கிரிப்டோ நாணயத்துக்கு வாங்கும் விற்கும் பலமோ, சந்தையில் பயன்படுத்தும் தகுதியோ, பொருட்கள் வாங்க விற்க மற்றும் பரிமாற்றம் செய்துகொள்ளும் மதிப்போ இருக்காது.
உதாரணத்துக்குச் சொல்வதானால் நாளை நான் கூட ஒரு கிரிப்டோ நாணயத்தை வெளியிடலாம், விளம்பரங்களின் மூலமாகவும், ஆசை வார்த்தைகளின் மூலமாகவும் அவற்றை மற்றவர்களிடம் விற்றுவிடலாம். விற்பனை செய்த எனக்கு உண்மையான பணம் அதாவது அரசாங்கங்கள் உத்தரவு அளித்து வெளியிட்ட பணம் கிடைத்துவிடும், அதற்கு மாற்றாக எனது கிரிப்டோ நாணயங்களை வாங்கியவர்களுக்கு மின்னியல் கிரிப்டோ நாணயம் என்ற பெயரில் சில வடிவமைக்கப்பட்ட எண்கள் மட்டுமே கிடைக்கும். அவற்றை அவர்கள் விற்கவோ, உண்மையான பணமாக மாற்றிக் கொள்ளவோ முடியாது. அவற்றைக் கொண்டு பொருட்கள் வாங்கவோ, சேவைக் கட்டணங்கள் செலுத்தவோ முடியாது.
மேலே குறிப்பிட்ட கிரிப்டோ நாணயங்களின் தன்மைகளைக் கொண்ட பல நூறு பொய்யான கிரிப்டோ நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன, கிரிப்டோ நாணயங்களை வாங்க விருப்பம் உள்ளவர்கள் ஒன்றுக்கு நூறு முறை சிந்தித்து சரியான சந்தை மதிப்புடைய நாணயங்களை மட்டுமே வாங்க வேண்டும்.
சரியான நிலையான சந்தை மதிப்புடைய நாணயங்கள் 50 இருக்கலாம். Bitcoin, Ethereum, Binance coin, Polkadot, Tether, XRP, Cardano, Litecoin, Chainlink, Stellar, Dogecoin, EOS, Terra, Holo என்ற வரிசையில் முதல் ஐம்பது நாணயங்களை சுலபமாக வாங்கவோ விற்கவோ, மற்ற நாணயங்களாக மாற்றிக்கொள்ளவோ, பணமாக மாற்றிக்கொள்ளவோ முடியும்.
அதன் வரிசையில் அடுத்த நூறு நாணயங்களை தரமான நாணயங்களாக மாற்றி பயன்படுத்தலாம் அல்லது stable coins என்று அழைக்கப்படும் அமெரிக்க டாலர் மதிப்புடைய நாணயங்களாக மாற்றிக் கொள்ளலாம். தேவைப்பட்டால் அவற்றை விற்று பணமாகவும் மாற்றிக் கொள்ளலாம்.
சரியான நிர்வாகம் செய்யப்படும் முறையான கிரிப்டோ நாணயங்கள் பெரிய கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் (Cryptocurrency exchange) என்று அழைக்கப்படும் கிரிப்டோ நாணயங்களை பரிமாற்றம் செய்யக்கூடிய இணையதளங்களில் வாங்கலாம். Binance, Coinbase, Kraken, Crypto.com, Kucoin, Bittrex போன்றவை அவற்றில் சில.
சந்தை மதிப்புடைய கிரிப்டோ நாணயங்களை வாங்க விரும்புவோர் பெரிய கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் பாதுகாப்பாக வாங்கலாம். இவைப் போன்ற முதன்மையான 20 கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் வாங்கவோ விற்கவோ முடியாது என்றால் அந்த கிரிப்டோ நாணயத்துக்கு சந்தை மதிப்பு கிடையாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
Leave feedback about this